எந்தத் துறையிலும் இதற்குமுன் யாரும் சிந்திக்காத புதிய சிந்தனைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்குதான் பெரிய மதிப்பு இருக்கும். அதே நேரம், அந்தச் சிந்தனைகள் உலகில் வேறு எங்கும் காணப்படாத அளவுக்குப் புத்தம்புதியவையாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை, மூன்றே அடிப்படை வண்ணங்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வண்ணங்கள் உருவாக்கப்படுவதுபோல், ஓர் இடத்தில் காணும் யோசனையை அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத இன்னோரிடத்தில் பயன்படுத்தலாம், அல்லது, மூன்று வெவ்வேறு யோசனைகளை ஒட்டுப்போட்டு ஒரு புதிய யோசனையை உருவாக்கலாம், மனமிருந்தால் மார்க்கபந்து.
1950களில் ஜப்பானில் Yoshiaki Shiraishi என்கிறவர் ஒரு சிறு உணவகம் வைத்திருந்தார். மலிவான விலை, தரமான உணவு என்பதால் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவளித்தார்கள், ஆனால், அத்தனை பேருக்கும் உணவு பரிமாறுவதற்குப் போதுமான வேலையாட்கள் (சர்வர்கள்) கிடைக்கவில்லை.
நம் ஊரில் இது ஒரு பிரச்னையே இல்லை, சட்டென்று வட இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டுவந்து சமாளித்திருப்பார்கள். ஆனால், ஜப்பானில் அந்த வசதி இல்லைபோல, இந்தத் தொழிலாளர் பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்று தீவிரமாக யோஷிக்கத்தொடங்கினார் யோஷியாகி.
அந்த நேரத்தில் அவர் எதேச்சையாக ஒரு பியர்த் தொழிற்சாலைக்குச் செல்லவேண்டியிருந்தது. அங்கு கன்வேயர் பெல்ட்டில் வரிசையாக நகர்ந்து செல்கிற பியர் பாட்டில்களைப் பார்த்ததும், அவருக்குச் சட்டென்று ஒரு யோசனை, ‘இதை நம்முடைய உணவகத்தில் பயன்படுத்திப்பார்த்தால் என்ன?’
அதாவது, சர்வர்களே இல்லாத ஓர் உணவகம், அங்கு சாப்பிட வருகிற மக்கள் முன்னே ஒரு கன்வேயர் பெல்ட் ஓடும், அதில் விதவிதமான உணவுப் பொருட்கள் நிறைந்திருக்கும், அவை தீரத்தீர புதிய உணவுப்பொருட்கள் நிரப்பப்படும், மக்கள் வேண்டியதை எடுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம், இதுதான் யோஷியாகிக்குத் தோன்றிய யோசனை.
1958ல் உலகின் முதல் கன்வேயர் பெல்ட் உணவகத்தை அறிமுகப்படுத்தினார் யோஷியாகி. சுற்றியிருந்தவர்கள் அவரை ‘ஒருமாதிரி’ பார்த்தாலும், இந்த யோசனை மக்களுக்குப் பிடித்திருந்தது, பியர்த் தொழிற்சாலையில் கிடைத்த யோசனையை உணவகத்தில் பயன்படுத்தி வெற்றிபெற்றுவிட்டார் அவர்.
இன்று, ‘கன்வேயர் பெல்ட் உணவகங்கள்’ உலகம்முழுக்க இருக்கின்றன, யோஷியாகி தன்னுடைய புதுமையான யோசனையால் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்!
ஒருவிதத்தில், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் போன்ற வலைத்தளங்கள்கூட இந்தக் கன்வேயர் பெல்ட் உணவக யோசனையைத்தான் பயன்படுத்துகின்றன: நம்முன்னால் ஒரு feed ஓடிக்கொண்டே இருக்கிறது, அதில் பல பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் வருகின்றன, பிடித்ததை நிறுத்திப் படிக்கலாம், இல்லாவிட்டால் விட்டுவிட்டு அடுத்த பதிவைப் பார்க்கலாம், feed தொடர்ந்து ஓடும்.
ஒரே பிரச்னை, கன்வேயர் பெல்ட் உணவகத்தில் சுவையான மசால் தோசையை எடுக்காமல் விட்டுவிட்டால் கவலையில்லை, சில தட்டுகளுக்குப்பின் அதே மசால் தோசை மீண்டும் வரும். ஆனால் இங்கு, மொக்கைப் பதிவுகளில் மயங்கி, அவற்றினிடையே ஒரு நல்ல பதிவைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான், அது மீண்டும் வரப்போவதில்லை.
