ராக்கெட் அறிவியலாளர் நம்பி நாராயணன் அவர்களுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தைப் பார்த்தேன். ஓர் உண்மைக் கதையை ஆவணப்படத்தின் சாயல் வராமல் எடுக்கும் கடினமான கலையில் (அறிமுக இயக்குநர்) மாதவன் 80% வெற்றிபெற்றிருக்கிறார். அவர் உணர்வெழுச்சியை உண்டாக்க விரும்பிய கணங்கள் அனைத்தும் சரியாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெறுகிற நேரத்தில், அதைக் கொண்டாடவேண்டிய சூழ்நிலையில் அவர் தன் மனைவியிடம் உளமார மன்னிப்பு கேட்கும் காட்சி.
‘தேசத்துரோகி’ என்கிற பழிச்சொல் ஒருவரையும் அவருடைய குடும்பத்தையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் படம் அழுத்தமாகச் சொல்கிறது. அந்தச் சொல் இன்று சகட்டுமேனிக்குப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் இது சிறு பெருமூச்சையும் வரவழைக்கிறது.
விக்ரம் சாராபாய் வரலாற்றையும் இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்றையும் ஓரளவு அறிந்தவன் என்றமுறையில் என்னால் படத்தைப் பெருமளவு புரிந்துகொள்ள இயன்றது. ஆனால் எல்லாருக்கும் இது புரியும் என்று தோன்றவில்லை. அதே நேரம், சிக்கலான தொழில்நுட்பத்தைக் கொண்ட ராக்கெட் அறிவியல் பின்னணியை அனைவருக்கும் சென்றுசேர்கிற மசாலாப் படம்போல் எடுப்பதும் சிரமம்தான்.
எனினும், இது அறிந்துகொள்ளவேண்டிய வரலாறு, அதனால் எல்லாரும் பார்க்கவேண்டிய படம்.