ஒரு புத்தகம் எழுதினால் என்ன கிடைக்கும்?
எழுதிய மறுகணம் மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கும். ‘அப்பாடா, ஒருவழியாக எழுதிவிட்டோம், இனிமேல் சில நாள் கார்ட்டூன் பார்த்துக்கொண்டு பொழுதை ஓட்டலாம்’ என்று ஒரு நிம்மதி கிடைக்கும். வெளியானபின் அதைப் பார்த்துப் பெருமைப்படலாம், நாலு பேர் அதைப் படித்துப் பாராட்டினால் செருக்கு வரும், பதிப்பாளர் ஒழுங்காக ராயல்டி கொடுத்தால் கொஞ்சம் காசு வரும், அதிர்ஷ்டமிருந்தால் ஓரிரு விருதுகளும் வரலாம், அதற்குமேல் என்ன வந்துவிடும்?
1969ம் ஆண்டு ருமேனியாவில் ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள்: அந்நாட்டுச் சிறையில் இருக்கிற கைதிகள் அங்கிருந்தபடி புத்தகம் எழுதினால் அவர்களுடைய தண்டனைக் காலத்தில் 30 நாட்கள் குறைக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதினால், ஒவ்வொரு புத்தகத்துக்கும் தலா 30 நாட்கள் குறைக்கப்படும்.
‘ஐ, ஜாலி’ என்று கவிதைப் புத்தகமோ, ‘அப்துல் கலாம் ஒருமுறை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது…’ என்று தொடங்கும் தன்னம்பிக்கைப் புத்தகங்களோ எழுதக்கூடாது. இந்தச் சலுகை அறிவியல் புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்குமட்டும்தான்.
அதனால்தானோ என்னவோ, 1969ல் தொடங்கி 2010வரை அந்நாட்டுச் சிறைகளில் வெறும் நான்கு அறிவியல் புத்தகங்கள்தான் எழுதப்பட்டன. மற்ற கைதிகளெல்லாம் அறிவியல் எழுதுவதைவிடச் சிறைத் தண்டனையே மேல் என்று தீர்மானித்துவிட்டார்கள்போல!
சரி, 2010க்குப்பிறகு என்ன ஆச்சு?
அந்த ஆண்டில், இந்தப் பழைய சட்டத்தை யாரோ தூசு தட்டி எடுத்திருக்கிறார்கள், அதைப்பற்றிக் கைதிகளுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ‘சும்மா உட்கார்ந்திருக்கிற நேரத்துல ஏழெட்டுப் புத்தகம் எழுதினா சீக்கிரமா வீட்டுக்குப் போயிடலாம்’ என்று ஆசை காட்டியிருக்கிறார்கள்.
ஆகவே, 2011ல் மூன்று, 2012ல் ஆறு, 2013ல் 11 என்று நூல்கள் எகிறத் தொடங்கின, 2014ல் இந்த எண்ணிக்கை அறுபதைத் தொட்டது, 2015ல் 331 ஆனது. அதாவது, 365 நாட்களில் ருமேனியச் சிறைகளிலிருந்து 331 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. சம்பளத்துக்கு ஆள்வைத்து நடத்துகிற தொழில்முறைப் பதிப்பகங்களுக்குக்கூட ஒரே ஆண்டில் இத்தனை நூல்களை வெளியிடுவது சிரமம்தான்!
அதன்பிறகுதான், இதில் ஏதோ தில்லுமுல்லு நடக்கிறது என்பதை அந்நாட்டு அரசாங்கம் புரிந்துகொண்டது, இந்தச் சட்டத்தைத் தாற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டது.
காரணம், இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட பல நூல்கள், கட்டுரைகள் வெளியாட்களை வைத்து எழுதப்பட்டவை, அல்லது, ஏற்கெனவே வெளியான படைப்புகளைக் காப்பியடித்தவை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எப்படியும் சிறையில்தான் இருக்கிறோம், இங்கிருந்தபடி இன்னொரு குற்றம் செய்தால் தப்பில்லை என்று கைதிகள் நினைத்திருக்கவேண்டும்!