கூகுளில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, உரவாஜா (Urawaza) என்ற புத்தகத்தைக் கண்டேன். ‘அப்படீன்னா என்ன?’ என்று உள்ளே நுழைந்து பார்த்தேன்.
உரவாஜா என்ற ஜப்பானியச் சொல்லுக்கு, ‘ஒரு ரகசிய உத்தி’ அல்லது ‘குறுக்கு வழி’ என்று பொருளாம். ஆனால், இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து புரட்டியபிறகு, ரகசியம் என்பதைவிட, ‘பலருக்குத் தெரியாத அல்லது வழக்கத்துக்கு மாறான ஒரு தீர்வு’ என்கிற பொருள்தான் எனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
அதாவது, வழக்கமாக நாம் சந்திக்கிற பிரச்னைகளுக்கு, வழக்கமாக நாம் சந்திக்கிற பொருட்களைக் கொண்டே தீர்வு காண்பது. அல்லது, வழக்கமாக நாம் சந்திக்கிற பொருட்களைக் கூர்ந்து கவனித்து, ‘இதை வைத்து வேறு என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பது, வெவ்வேறு விஷயங்களை முயன்று பார்ப்பது, இருக்கிறவற்றைக் கொண்டு வாழ்க்கையை மிகுதியாக வாழ்வது.
எடுத்துக்காட்டாக, புதியவர்களை வரவேற்பதற்காக நன்கு குனிந்து நிமிர்கிற ஜப்பானியப் பழக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர் Lisa Katayama. ஒருவர்மீது நமக்கிருக்கும் மதிப்பைக் காட்டக்கூடிய இந்தப் பழக்கத்தை, குளிர்காலத்தில் உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்கும் பயன்படுத்துவார்களாம்.
அதாவது, நமக்கு எதிரில் ஒரு புதியவர், மிகவும் மதிப்பு மிக்க பெரியவர் வந்திருப்பதாக எண்ணிக்கொள்ளவேண்டும். அவரை வரவேற்கும்விதமாகத் தொடர்ந்து பத்து முறை குனிந்து நிமிரவேண்டும். இப்படிக் குனிந்து நிமிர்வதால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு விரைவாகுமாம், அதனால் உடலின் வெப்பநிலை கூடுமாம்.
இது மருத்துவரீதியில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. நூலாசிரியரும் இதைக் ‘கேள்வியறிவு’ அல்லது ‘பொதுமக்கள் அறிவு’ அல்லது ‘நம்பிக்கை’யாகதான் முன்வைக்கிறார். இந்தப் புத்தகம்முழுக்க இப்படிப் பல சுவையான குறிப்புகளைத் தனித்தனித் தலைப்புகளில் அழகழகான படங்களுடன் விவரித்திருக்கிறார். ஒவ்வோர் உத்தியும் ஏன் வேலை செய்கிறது என்பதற்கு விளக்கமும் தந்திருக்கிறார்.
நம் ஊரிலும் இதுபோல் பல சுவையான உத்திகள், உதவிக் குறிப்புகள், பாட்டி வைத்தியங்களெல்லாம் உண்டு. குறிப்பாக, ரெனால்ட்ஸ் பேனா மூடியை உலகின் முதல் ஃபிட்ஜெட் ஸ்பின்னராகப் பயன்படுத்தியவர்கள் நாம்தான் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?