குழந்தைகளுக்கென்று தனியாகக் கதைகள்/புத்தகங்களை எழுதுவது எதற்கு என்று கேட்கிறார் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். பொதுவான (அதாவது, பெரியவர்களுக்கென்று எழுதப்படும்) புத்தகங்களில் குழந்தைகளுக்கு ஏற்றவற்றைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கொடுத்தால் போதும் என்பது அவருடைய கருத்து.
இதை விளக்குவதற்கு அவர் பயன்படுத்தும் உவமை மிகச் சுவையாக இருக்கிறது: நோய் எல்லாருக்கும் பொதுவானதுதான், அதைக் குணப்படுத்தும் மருந்தும் பொதுவானதுதான். ஒருவேளை அந்த நோயாளி சிறு குழந்தையாக இருந்தால், அவருடைய வயதுக்கேற்ப அந்த மருந்தின் அளவைத்தான் மாற்றுவார்கள், குழந்தைகளுக்கென்று புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கமாட்டார்கள்.
நீங்கள் இன்னொரு தகவலைக் கேள்விப்பட்டால் இந்த உவமை இன்னும் சிறப்பாகத் தோன்றும். செகாவ் புகழ் பெற்ற எழுத்தாளர்மட்டுமில்லை, மருத்துவரும்கூட!
***