வேலை வாய்ப்பை நாடுகிறவர்கள் முதலில் நிறுவனங்களை, அவற்றிலுள்ள வாய்ப்புகளை ஆராயத்தொடங்குகிறார்கள், அவற்றுடன் தன்னுடைய திறமையை, அனுபவத்தைப் பொருத்திப்பார்க்கிறார்கள், பொருந்தும் இடங்களில் நேர்காணலுக்குச் செல்கிறார்கள், அதில் வெற்றிபெற்றவுடன், அந்த நிறுவனத்தில் சேர்கிறார்கள்.
இவற்றுக்கு நடுவில் ஒரு முக்கியமான, ஆனால், பலரும் அவ்வளவாகக் கவனிக்காத படிநிலை, சம்பளம் பேசுவது.
நான் இதுவரை நான்கு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். நான்கு முறையும் அவர்கள் எனக்குத் தருவதாகச் சொன்ன சம்பளத்தை, மற்ற வசதிகளை அப்படியே எந்தத் திருத்தங்களும் இல்லாமல் ஏற்றுக்கொண்டேன். ஏனெனில், என் கணிப்பில், மதிப்பீட்டில் அது எனக்குச் சரியாகத் தோன்றியது.
ஆனால், இந்த விஷயத்தில் நான் செய்தது தவறு என்று என் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள். ‘உன்னுடைய தகுதிக்குச் சந்தை நிலவரப்படி சரியான சம்பளம் என்ன என்று ஆராய்ந்து அதைத் தந்தால்தான் ஆச்சு என்று நீ பேரம் பேசியிருக்கவேண்டும், அதில் எந்தத் தவறும் கிடையாது’ என்கிறார்கள்.
இவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது. ஆனால், என்னால் அதைச் செய்ய இயலும் என்று தோன்றவில்லை. பெரும்பாலான இந்தியர்களைப்போல் நானும் நிறுவனங்களை அண்ணாந்து பார்க்கிறவன்தான். சம்பளம் என்பது, வேலையை அளிப்பவர்கள் தீர்மானிப்பது, நாமாகக் கேட்பது இல்லை என்கிற பழைய சிந்தனை எனக்குண்டு.
நல்ல வேளையாக, இளைய தலைமுறை அப்படியில்லை. அவர்கள் தங்களுடைய மதிப்பை நன்கு உணர்ந்திருக்கிறார்கள், ‘நீயும் நானும் (அதாவது, நிறுவனமும் நானும்) இதில் சம பங்குக் கூட்டாளிகள்தான். நீ இந்தச் சம்பளத்தை, வசதிகளைத் தந்தால் உன் நிறுவனத்தில் சேர்கிறேன், இல்லாவிட்டால் வேறு இடம் பார்க்கிறேன்’ என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள்.
ஒருவேளை, நீங்கள் அப்படிப் பேரம் பேச விரும்பினால், ஆனால், எப்படிப் பேசுவது என்று தயங்கினால், அதற்கு Riva Negotiations என்ற பெயரில் ஒரு நல்ல சேவை அறிமுகமாகியிருக்கிறது. உங்களுடைய அனுபவம், நீங்கள் செய்யும் வேலையின் தன்மை, உங்களிடம் கைவசம் இருக்கிற மற்ற வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உங்களுடைய சம்பளக் கோரிக்கையை அழகான ஆங்கிலத்தில் தெளிவாகப் புரியவைக்கிற கடிதங்களை இவர்கள் உருவாக்கித்தருகிறார்கள். அதில் வேண்டிய தகவல்களை நிரப்பி அப்படியே காபி, பேஸ்ட் செய்தால் போதும்.
வேலை விஷயத்தில்மட்டுமில்லை, பொதுவாகவே எல்லா விஷயங்களிலும் பேரம் பேசக் கற்றுக்கொள்வது நல்லதுதான். அதிலிருக்கும் இயல்பான தயக்கத்தை உடைத்துவிட்டால், நமக்குத் தகுதியுள்ளதை உரிமையுடன் கேட்டுப் பெறலாம்.