ஒருவர் எப்பேர்ப்பட்ட எழுத்தாளராக இருந்தாலும் சரி, தான் எழுதியதையெல்லாம் அச்சுக்குக் கொடுத்துவிடமாட்டார். சொல்லப்போனால், பெரிய, சிறந்த எழுத்தாளர்கள் பலர் தாங்கள் எழுதியதில் எதைப் பதிப்பிக்கவேண்டும், எதைச் சத்தமில்லாமல் வெட்டி வீசிவிடவேண்டும் என்பதில் மிகக் கறாராக இருப்பதைக் கண்டுள்ளேன்.
அதாவது, ஓர் எழுத்தாளருடைய மிகப் பெரிய, மிக மோசமான, மிகக் கண்டிப்பான, மிகவும் இரக்கமற்ற விமர்சகர் அவரேதான். தன் எழுத்து இந்தத் தரத்துக்குமேல் இருக்கவேண்டும் என்று அவர் ஒரு கடினமான அளவுகோலை வைத்துக்கொண்டிருப்பார். அதை எட்டாத படைப்புகளை எறிந்துவிடுவார், அல்லது, மாற்றி எழுதுவார். ஒரு நாள், இரண்டு நாள், சில வாரங்கள், சில மாதங்கள், சில வருடங்களானாலும் சரி, அந்த அளவுகோலைத் தாண்டாத எதுவும் அவருடைய மேசையைத் தாண்டி வராது.
இன்னும் சுவையான விஷயம், இந்த அளவுகோலும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கும். தன்னுடைய பழைய புத்தகங்களைப் புரட்டிப்பார்த்து, ‘நானா இவ்வளவு கொடுமையாக எழுதினேன், ஹூம்’ என்று அவ்வப்போது (தனக்குள்) நொந்துகொள்ளாத எழுத்தாளர் என்று அநேகமாக யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், அன்றைய அவருடைய அளவுகோலைத் தாண்டி வெளியான கதையோ கட்டுரையோ இன்றைய அவருடைய அளவுகோலைத் தாண்டுவதில்லை. ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவதுபோல், ‘எழுத்தாளர் வளர்கிறாரே, மம்மி!’
அப்படியானால், தான் எழுதியதைத் தானே மெச்சி மகிழ்கிறவர்கள் நல்ல எழுத்தாளர்கள் இல்லையா?
தன்னுடைய படைப்பை உச்சி மோந்து கொண்டாடுவது ஒரு மிகப் பெரிய சுகம்தான். ஆனால், அதை இப்போது எழுதினால் இன்னும் நன்றாக எழுதியிருப்போம் என்று நமக்கே உறுதியாகத் தோன்றுவது அதைவிடப் பெரிய சுகம்.