எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்வதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன:
- வேலையை, அதன் தேவையைப் புரிந்துகொண்டு, அதை எப்படிச் செய்வது என்று திட்டமிடுவது
- உண்மையில் அந்த வேலையைச் செய்வது
இப்படிப் பிரித்துப்பார்ப்பது கொஞ்சம் அபத்தமாகத் தோன்றினாலும், இந்த இரு நிலைகளையும் எல்லாரும் ஒரேமாதிரியாகச் செய்வதில்லை என்கிற கோணத்தில் பார்க்கும்போது, இதை இப்படி ஆராய்வது முக்கியமாகிறது. அதாவது, திட்டமிட்ட மனிதரெல்லாம் செய்துமுடிப்பதில்லை, செய்துமுடித்த மனிதரெல்லாம் திட்டமிட்டவர் இல்லை.
சிலர் பல விஷயங்களை ஆர்வத்துடன் தொடங்குவார்கள், திட்டமிடுவார்கள், ஆனால், செய்துமுடிக்கமாட்டார்கள். காரணம், செய்துமுடிக்கும் திறமையின்மை, ஆர்வமின்மை, சூழ்நிலை சார்ந்த பிரச்னைகள், அல்லது, திட்டமிட்டவுடனேயே அவர்கள் மனத்தில் ஒரு நிறைவு ஏற்பட்டுவிடுகிறது, அடுத்த திட்டத்தை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள்.
வேறு சிலருக்குத் திட்டமிடத் தெரியாது, ஆனால் தொபீரென்று ஆற்றில் குதித்துக் கையைக் காலை உதைத்து முன்னேறிவிடுவார்கள். இது கொஞ்சம் ஆபத்தான வழிதான். ஆனால், இதிலும் பெரிய வெற்றியடைந்தவர்கள் இருக்கிறார்கள். ‘உட்கார்ந்து நாள்கணக்காத் திட்டம் போட்டுகிட்டிருந்தா என்னால இதைச் செஞ்சிருக்கவேமுடியாது’ என்பது இவர்களுடைய கட்சி.
நம்மில் பெரும்பாலானோர் இந்த இரண்டுக்கும் நடுவில் இருப்போம், ஓரளவு சுமாராகத் திட்டமிடுவோம், அது கச்சிதமாக அமையவேண்டும் என்பதற்காகக் காத்திருக்காமல் செயலில் இறங்குவோம், அதில் கிடைக்கிற பலன்கள் (அல்லது, பிரச்னைகள்) அடிப்படையில் அந்தத் திட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொள்வோம், அடுத்தமுறை இன்னும் நன்றாகத் திட்டமிடுவோம். இது கச்சிதமான உத்தி இல்லை, ஆனால், ஆபத்து குறைவான, பலன்களைப் பெறும் சாத்தியம் மிகுதியான ஒரு நல்ல உத்தி.
உங்களால் திட்டமிட இயலுகிறது, ஆனால், அதைச் செயல்படுத்த ஆர்வமில்லை, சோர்வாக இருக்கிறது, எரிச்சல் வருகிறது, பிறர்மீது சினம் கொள்கிறீர்கள் என்றால், அதற்கு Serotonin என்ற வேதிப்பொருளின் குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அலெக்ஸ் கோர்ப் என்ற நரம்பியல் அறிஞர். இந்த வேதிப்பொருள் மூளையில் குறைவாகச் சுரக்கும்போது மன உறுதி குறைகிறதாம், எதிலும் கவனம் செலுத்த இயலாதபடி பரபரப்பு உண்டாகிறதாம், இதுதான் அழுத்தத்தை உண்டாக்குகிறது, எதையும் ஒழுங்காகச் செய்ய இயலாதபடி ஆக்குகிறது என்கிறார் இவர். இந்த வேதிப்பொருளின் சுரப்பை/அதை நம் உடல் ஏற்றுக்கொள்கிற சாத்தியத்தை மேம்படுத்துவதற்கு நான்கு நல்ல, எளிய, எல்லாரும் பயன்படுத்தக்கூடிய வழிகளையும் சொல்கிறார்:
- சூரிய ஒளியில் நேரம் செலவிடுதல் (நாள்தோறும் வைட்டமின் D)
- மசாஜ் செய்துகொள்ளுதல் (வாரத்துக்கு இருமுறை)
- உடற்பயிற்சி (குறிப்பாக, ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல், யோகாசனம்)
- மகிழ்ச்சியான நினைவுகளை அடிக்கடி எண்ணிப்பார்த்தல் (அல்லது, அந்த நினைவுகளுடன் தொடர்புடையவர்களுடன் பேசுதல், புகைப்படங்களைப் பார்த்தல், நாட்குறிப்பை வாசித்தல்)
இணைப்புகள்: