டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 200 ரன் எடுத்தபோது அது வேறு எந்த ஆணும் செய்யாத வரலாற்றுச் சாதனையாக இருந்தது, 50 ஓவர் கிரிக்கெட் விளையாடுகிற ஆண்களால் இவ்வளவுதான் இயலும் என்கிற விளிம்பைக் கடந்து முன்னேறுவதாக இருந்தது. அவர் எப்படியாவது 200ஐக் கடந்துவிடவேண்டும் என்று ரசிகர்கள் பதறியது அதனால்தான்.
இன்று பலர் 200ஐக் கடந்துவிட்டார்கள். அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் (அதாவது, மிகக் குறைவான ரன் எண்ணிக்கை) உள்ளவர் டெண்டுல்கர்தான்.
இப்போதும் அது முன்னோடிச் சாதனைதான், ஆனால், கீழ் இலக்கு ஆகிவிட்டது. மேல் இலக்கை வேறொருவர் அமைத்துவிட்டார். அதைக் கடப்பதுதான் அடுத்த சவால்.
பங்குச்சந்தையிலும் இதைப் பார்க்கலாம். நாம் முதலீடு செய்த ஒரு பங்கு எப்படியாவது 200 ரூபாய்க்கு உயர்ந்துவிடுமா என்று ஆசைப்படுவோம். சில ஆண்டுகளில் அது 300, 350 என்று உயர்ந்தபிறகு, ‘அச்சச்சோ, இந்தப் பங்கு 200 ரூபாய்க்குச் சென்றுவிடுமோ’ என்று பதறுவோம். பழைய மேல் இலக்கு இப்போது கீழ் இலக்கு.
‘உள்ளுவது (நினைப்பது) எல்லாம் உயர்வு உள்ளல்’ என்று திருவள்ளுவர் சொன்னது இதனால்தான். பல நிறுவனங்கள் ‘Think Big’ என்பதை ஒரு தலைமைப்பண்பு மந்திரமாகக் கருதுவதும், அப்படிச் சிந்திக்கிறவர்கள் மளமளவென்று உயர்வதும் இதனால்தான்.