ஒரு திருக்குறளில் ‘சிமிழ்த்தல்’ என்ற சொல்லைக் கண்டேன். ‘வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று’ என்று எழுதுகிறார் வள்ளுவர். அதாவது, வேடர் ஒருவர் பறவை ஒன்றைப் பிடிப்பது.
ஆக, சிமிழ்த்தல் என்றால் பிடித்தல் என்று பொருளா? அப்படியானால், குங்குமத்தைத் தனக்குள் பிடித்துவைப்பதால்தான் அதைக் ‘குங்குமச் சிமிழ்’ என்கிறோமா? இந்தத் திசையில் யோசிக்கப் பெரிய ஆர்வம் வந்துவிட்டது. அகரமுதலியில் இந்தச் சொல்லைத் தேடிப் படித்தேன்.
‘சிமிழ்’ என்ற வினைச்சொல்லுக்குப் பிடி அல்லது கட்டு என்று பொருள். சிமிழ்ப்பு என்றால் பிணைப்பு.
சிலர் இன்னும் நுட்பமாகச் சென்று ‘சிமிழ்’ என்றால் மூடிப் பிடி என்று பொருள் சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஓடுகின்ற தண்ணீரை அல்லது மரத்திலிருந்து விழும் இலை ஒன்றை நாம் இரு கைகளாலும் மூடிப் பிடிப்பதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, வேடர் பறவையை வலையால் மூடிப் பிடிக்கிறார், நாமும் குங்குமச் சிமிழுக்குள் குங்குமத்தைப் போட்டு மூடிப் பாதுகாக்கிறோம்.
உண்மையில் மூடி போட்டுப் பாதுகாக்கக்கூடிய எதற்கும் சிமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்போல. ‘மூக்குப்பொடிச் சிமிழ்’ என்று ஒரு சொல் பார்த்தேன். ‘சிந்தனைச் சிமிழ்’ என்று ஒரு புத்தகத்தை ஒருவர் பாராட்டியிருந்தார்.
‘கண் சிமிட்டல்’ என்ற சொல்லுக்கும் இதுதான் வேர் என்கிறார்கள். ‘சிமிட்டல்’ என்றால், கண்களை மூடித் திறப்பது.