நாம் எதைச் செய்யவேண்டும் என்று அவ்வப்போது அறிவுரை சொல்லி வழிகாட்டுகிறவர்கள் நம் நன்றிக்குரியவர்கள். ஆனால், அதை ஏன் செய்யவேண்டும் என்கிற காரணத்தையும் அவர்கள் சொல்வதுதான் முறை. இல்லாவிட்டால் அவர்கள் ஐயத்துக்குரியவர்கள்.
காரணம் சொல்வது ஏன் முக்கியம்?
“இதனை இதனால் செய்யவேண்டும்” என்பது நம் மூளைக்கு ஒரு குறிப்பு. “அதனால் பலன் வந்ததா, இல்லையா” என்பது அதன்மேல் அமர்கிற கூடுதல் குறிப்பு. இந்த இரண்டும் தொடர்ந்து நெடுநாட்கள், பல மாதங்கள், ஆண்டுகள் நடக்கும்போது நம் அறிவும் மேதைமையும் இயல்பாக மேம்படுகின்றன.
அப்படி இல்லாமல் “இதனைச் செய்யவேண்டும்” என்ற குறிப்புமட்டும் மூளையில் பதிந்தால், “அதனால் பலன் வந்ததா, இல்லையா” என்கிற கூடுதல் குறிப்பு பயனற்றுப்போய்விடும்; அது வெறும் அதிர்ஷ்ட விளையாட்டாகிவிடும். நாணயத்தைச் சுண்டினால் தலை விழுமா, பூ விழுமா என்பது யாருக்கும் தெரியாது; ஆயிரம் முறை சுண்டினாலும் அதில் யாரும் மேதையாக இயலாது.
எனவே, காரணம் சொல்கிறவர்களை(மட்டும்) ஆசிரியராக ஏற்றுக்கொள்வது நமக்கு நல்லது. ஒருவேளை, அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ளும் திறன் நமக்கு இல்லாவிட்டாலும், ஒரு நல்ல ஆசிரியர் சிறிது சிறிதாக அந்தத் திறனை உருவாக்கி நம்மைப் புரிந்துகொள்ளவைப்பார். மாணவருடைய தொடர் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் தங்களுடைய தலைக்கனத்துக்குத் தீனி போடத்தான் கற்றுத்தருகிறார்கள். தன்னைத் தாண்டிச் செல்லும் மாணவரைப் பார்த்துப் பெருமைப்படும் ஆசிரியர்தான் உண்மையான வெற்றியாளர். இந்தப் பண்பில் அவரை யாராலும் தாண்டிச் செல்ல இயலாது.