ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள மிகுந்த நேரமும் உழைப்பும் கவனமும் தேவை. மிகச் சில பன்மொழித் திறமையாளர்களைத் தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலானோருக்குத் தாய்மொழியுடன் அதிகபட்சம் 1 கூடுதல் மொழியை நன்கு கற்கத்தான் நேரம் இருக்கும். இன்றைய உலகச் சூழலில் அந்த 1 கூடுதல் மொழியாக ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் அறிவார்ந்த செயல். இதில் போட்டிக்கு இடமும் இல்லை, தேவையும் இல்லை. அதை நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றபின் நேரமும் ஆர்வமும் இருந்தால் வேறு 100 மொழிகளைக்கூடக் கற்கலாம்.
இதை பிரிட்டிஷ் அடிமைத்தனத்துடன் இணைத்துப் பார்ப்பதெல்லாம் வீணான திசைதிருப்பல். ஆங்கிலம் பிரிட்டிஷ்காரர்கள்மூலம் இங்கு வந்த மொழியாக இருக்கலாம். ஆனால் இன்று அது உலக மொழி, பல வாய்ப்புகளைத் திறக்கும் மொழி. அதனால்தான் நாம் அதைக் கற்கிறோம், முன்னாள் ஆட்சியாளருடைய மொழி என்பதால் இல்லை.