பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட்ட களப் பயிற்சிகளில் ஒன்று, பற்றவைத்தல் (வெல்டிங்). முதல் வகுப்பில் நான் அதைச் சரியாகச் செய்யத் தெரியாமல் (அதாவது, ஆசிரியர் சொல்லித்தந்ததை ஒழுங்காகப் பின்பற்றாமல்) கண்ணைக் கெடுத்துக்கொண்டேன். அதன்பிறகு, நான்கைந்து நாள் தூக்கமில்லாமல் விழித்திருக்கவும் இயலாமல் மிகவும் சிரமப்பட்டுக் குணமானேன்.
இதனால், அடுத்த வெல்டிங் வகுப்பு வந்தபோது எனக்கு மிகவும் அச்சமாகிவிட்டது. மறுபடியும் கண் வலி வரும் என்ற நடுக்கத்தில் வகுப்புக்குக் கட் அடித்துவிட்டேன்.
அந்த வகுப்புமட்டுமில்லை, அதன்பிறகு ஆண்டுமுழுக்க ஒரு வெல்டிங் வகுப்புக்குக்கூட நான் செல்லவில்லை.
உண்மையில் இது ஒரு பெரிய முட்டாள்தனம். ஏனெனில், ஆண்டு நிறைவுத் தேர்வில் இந்தக் களப் பயிற்சிக்குத் தனி மதிப்பெண் உண்டு. ஒருவேளை அங்கு எனக்கு வெல்டிங் வேலை தரப்பட்டால் நான் ஃபெயிலாகவேண்டியதுதான்.
ஆனால், எனக்குக் கண் வலியைவிட ஃபெயில் குறைந்த தண்டனையாகத் தோன்றியது. அதனால் நண்பர்கள் ‘நான் கத்துத்தர்றேன்’ என்றும், ‘நான் சார்கிட்ட சொல்றேன், அவர் உனக்குக் கவனமா ஒழுங்கா மறுபடி சொல்லித்தருவார்’ என்றும் பலவிதமாக வற்புறுத்தியும் நான் வெல்டிங் வகுப்புகளுக்குச் செல்லவில்லை.
யார் செய்த புண்ணியமோ, ஆண்டு நிறைவுத் தேர்வில் எனக்கு வெல்டிங் வேலை தரப்படவில்லை. தச்சு வேலையைச் செய்து தேர்ச்சி பெற்றுவிட்டேன்.
நேற்று இந்தக் கதையை என் மகள்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது அவர்கள் என்னை நம்பமுடியாமல் சற்றுத் திகிலுடன் பார்த்தார்கள். ‘ஒருவேளை ஃபைனல் எக்ஸாம்ல வெல்டிங் வேலை வந்திருந்தா என்ன செஞ்சிருப்பே?’ என்றார்கள்.
‘என்ன செய்யறது? வேலை செய்யறமாதிரி நடிச்சிருப்பேன். அரைகுறையா எதையாவது செஞ்சிருப்பேன். யார் கண்டது, அது சுமாரான வெல்டிங்கா வரலாம், வாத்தியார் என்மேல இரக்கப்பட்டுப் பாஸ் மார்க் போட்டிருக்கலாம்’ என்றேன். ‘இல்லாட்டி, ஃபெயிலாகியிருப்பேன். அடுத்த முறை எக்ஸாம் எழுதும்போதும் அதே வெல்டிங் வந்தா நம்ம அதிர்ஷ்டத்தை நொந்துக்கவேண்டியதுதான்.’
‘இவ்ளோ ரிஸ்க் எடுக்கறதுக்கு ஒழுங்காக் கிளாஸுக்குப் போயிருக்கலாம்ல? ஒருவாட்டி கண் வலி வந்தா மறுபடி கண் வலி வரும்ன்னு என்ன நிச்சயம்?’ என்றாள் நங்கை, ‘Risk Vs Reward யோசிச்சுப் பார்த்தா நீ செஞ்சது பெரிய தப்பு.’
இனி ஆண்டுமுழுக்க வெல்டிங் வகுப்புகளுக்குச் செல்வதில்லை என்று நான் தீர்மானித்தபோது, எனக்கு நங்கையின் வயதுதான். ஆனால், நான் படித்த பள்ளி ஆசிரியர்களோ என் பெற்றோரோ என்னுடைய படிப்பு அனுபவமோ எனக்குப் பெரிய சிந்தனை வளத்தை, முதிர்ச்சியைக் கொடுத்திருக்கவில்லை, Risk Vs Reward எல்லாம் யோசிக்கத் தெரிந்திருக்கவில்லை. அப்போதைய அச்சம் அறிவை வென்றுவிட்டது.