கோரமங்களாவின் உள் தெருக்களில் நடப்பது மிக இனிமையான அனுபவம்.
அகலமான தெருக்கள், அவற்றில் ஒரு குழியையோ பள்ளத்தையோ பார்க்க இயலாது. சீர் என்றால் அப்படியொரு சீர், ஒழுங்கு என்றால் அப்படியோர் ஒழுங்கு. தெருவோர வெள்ளைக் கோடுகள்கூட அழியாமல் ஒளிரும்.
தெருக்கள் இப்படி என்றால் வீடுகளைப்பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? கிட்டத்தட்ட 20% மாளிகைகள், அவற்றோடு சேர்ந்து மற்ற வீடுகளும் பிரமாண்டமாகதான் இருக்கும், அவற்றின் கதவுகளைமட்டும் வரிசையாகப் பார்த்துக்கொண்டு சென்றால்கூட நமக்கெல்லாம் பெருமூச்சு வந்துவிடும்.
இந்தத் தெருக்களில் பெரும்பாலும் மனிதர்கள் தட்டுப்படமாட்டார்கள், எப்போதாவது ஓரிரு வண்டிகள் வரும், மற்றபடி எந்தத் தொந்தரவும் இல்லாமல் நடக்கலாம்.
தெருக்களின் இருபுறமும் பெரிய, மிகப் பெரிய மரங்கள் இருக்கும். பறவைகளின் பாடலை நாள்முழுதும் கேட்கலாம்.
ஆனால், ஒவ்வொரு தெருவிலும் ஏராளமான தெரு நாய்கள். அவை எப்போது வேண்டுமானாலும் உங்கள் மேல் பாயக்கூடும். கவனமாக நடக்கவேண்டும். கையில் ஒரு நீண்ட குச்சி இருந்தால் நல்லது.
கோரமங்களாவிலுள்ள பூங்காக்களைப்போல் நன்கு பராமரிக்கப்படும் பூங்காக்களை நான் பெங்களூரில் வேறெங்கும் கண்டதில்லை. அடர்ந்த பசுமை, தூய்மை, கூட்டமின்மை, இவையெல்லாம் நம்மை வேறோர் உலகத்துக்குக் கொண்டுசென்றுவிடும்.
இங்குள்ள மனிதர்களும் மற்ற பெங்களூருவாசிகளிடமிருந்து வேறுபட்டவர்களாகத் தோன்றுவார்கள். யாரிடமும் பரபரப்பு தெரியாது, ஒருவிதமான நிதானமும் கனிந்த முகத்தோற்றமும் இருக்கும். தெருக்களில் எந்தப் பதற்றமும் இல்லாமல் குழந்தைகள் ஓடி ஆடுவார்கள்.
இந்த விவரிப்பு கிட்டத்தட்ட கிராமத்தைப்போல் இருந்தாலும், சில நூறு மீட்டர் தொலைவில் பெருநகரச் சூழலும் உண்டு. ஏராளமான உணவகங்கள் உலகத்தின் புகழ் பெற்ற அனைத்து உணவுவகைகளையும் மதுவகைகளையும் வழங்கும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பொருள் வாங்கும் கடைகள் என அனைத்து வசதிகளையும் சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்கிறார்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த வணிக வளாகங்களில் ஒன்றைக்கூடப் பார்க்க இயலாது.
பெங்களூரில் இந்த ஒரு பகுதியைமட்டும் மக்கள் இப்படி இதமாக, பதமாக விட்டுவைத்திருக்கக் காரணம் என்ன என்று புரியவில்லை. ஒருவேளை, இங்கு வாழ்கிற பெரிய பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் இந்தப் பகுதியில் நெரிசல் உண்டாகக்கூடிய திட்டங்கள் எவையும் நுழையாதபடி பார்த்துக்கொள்கிறார்களோ?
This is awesome. Recalling the end of 20th century days. I was young during that time, and I used to jog in Koramangala. Green Young days!!!