1
நேற்று இரவு. கோரமங்களாவில் ஓர் உணவகம்.
ஒருவர் தனியாக நுழைகிறார். காலியாக இருந்த ஒரு மேசையில் சென்று அமர்கிறார், முதுகுப்பையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்துவிட்டு உணவுப் பட்டியலை எடுத்துப் புரட்டுகிறார்.
சில விநாடிகளில், மேலாளர் அங்கு வருகிறார். ‘சார், நீங்கமட்டுமா?’ என்கிறார்.
‘ஆமா’ என்கிறார் இவர்.
‘அப்படீன்னா இந்த மேசைக்கு மாறிக்கறீங்களா?’ என்று இரண்டு பேர்மட்டும் அமரக்கூடிய இன்னொரு சிறிய மேசையைக் காட்டுகிறார் அவர்.
‘ஏன்?’ என்று புருவம் உயர்த்துகிறார் இவர்.
‘இது ஆறு பேருக்கான மேசை. யாராவது குடும்பத்தோட வந்தாங்கன்னா அவங்களுக்குப் பயன்படும்.’
இந்த விளக்கத்தை அவர் சொல்லி ஒரு விநாடிகூட ஆகவில்லை. அந்த நபர் உணவுப் பட்டியலைக் கீழே போட்டுவிட்டுப் பையை எடுத்துக்கொண்டு சரேலென்று அந்த உணவகத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.
2
இன்று மாலை. அதே கோரமங்களாவில் வேறோர் உணவகம்.
அது குறுந்தீனிக்கான நேரம் என்பதால் அந்த உணவகம் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. மூலையில் ஒரே ஒரு மேசைமட்டும்தான் காலியாக இருக்கிறது.
ஒருவர் தனியாக நுழைகிறார், ஆவலுடன் சுற்றிப் பார்க்கிறார், காலியாக உள்ள மேசையைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் பாய்ந்து சென்று அமர்கிறார். முகத்தில் நிம்மதி, மகிழ்ச்சி.
மறுகணம், அந்த மகிழ்ச்சி காணாமல் போகிறது. எரிச்சலுடன் முகத்தைச் சுளித்தபடி எழுந்துகொள்கிறார்.
காரணம், அவர் அமர்ந்த மேசையில் ஒரு காஃபிக் கோப்பை இருக்கிறது. சற்றுமுன் அங்கு அமர்ந்திருந்தவர் அருந்திய கோப்பைதான் அது. தூய்மைப் பணியாளர் அதை இன்னும் நீக்கவில்லை.
ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஏனோ அது அசிங்கமான ஒரு பொருளைப்போல் தோன்றுகிறது. நான்கைந்து மேசை தள்ளியிருந்த தூய்மைப் பணியாளரைக் கை தட்டி அழைக்கிறார், அருவருப்புச் சைகையால் அந்தக் கோப்பையைச் சுட்டிக்காட்டி நீக்கச் சொல்கிறார். அவர் வந்து அதை நீக்கப்பட்டபிறகுதான் அவருடைய முகம் இயல்பாகிறது, நிம்மதியுடன் அந்த மேசையில் அமர்கிறார்.
*
நேற்றும் இன்றும் இரண்டு வெவ்வேறு உணவகங்களில் நான் பார்த்த காட்சிகள் இவை. இரண்டு நிகழ்வுகளிலும் நான் அடுத்த மேசையில் இருந்தேன் என்பதால் நடந்தவற்றை மிகத் தெளிவாகப் பார்த்துப் புரிந்துகொள்ளமுடிந்தது.
இதைப் பதிவுசெய்வதன்மூலம் நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஆறு பேர் மேசையில் அமர்ந்தவருக்கு அலுவலகத்தில் ஆயிரம் அழுத்தங்கள் இருந்திருக்கலாம், நிம்மதியாகச் சாப்பிட வந்தவருக்கு வேறு இடத்தில் மாறி உட்காரவேண்டும் என்கிற அறிவுறுத்தல் எரிச்சலூட்டியிருக்கலாம். பயன்படுத்தப்பட்ட காஃபிக் கோப்பையைப் பார்த்து அருவருத்த பெண் தூய்மை விரும்பியாக இருந்திருக்கலாம். அவரவர்க்கு ஒரு நியாயம் இருக்கும். அதை நான் மறுக்கவில்லை, புரிந்துகொள்கிறேன்.
ஆனால், இந்த இரு சூழ்நிலைகளிலும் அவர்கள் கடைப் பணியாளர்களை நடத்திய விதம்தான் எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. அவர்களும் மனிதர்கள்தான், உழைத்துப் பிழைக்கிறவர்கள்தான். நாம் வாடிக்கையாளர் நிலையில் உள்ளோம் என்ற ஒரே காரணத்தால் அந்தக் கடையில் பணியாற்றுகிற எல்லாரையும் இப்படி அலட்சியமாக நடத்தவேண்டுமா? உயர்ந்த படிப்பும் பெருநகர வேலை அனுபவமும் இந்தப் பண்பைத்தான் நமக்குக் கற்றுத்தருகின்றனவா?
பின்குறிப்பு: இந்நிகழ்வுகள் இரண்டும் சரியாகக் கோரமங்களாவில் நடைபெற்றிருப்பது எதேச்சையான ஒற்றுமை இல்லை என்பது பெங்களூர்வாசிகளுக்குப் புரியும்.