ஆண்டு நிறைவு வாரத்தைக் கொண்டாட விசாகப்பட்டினம், அரக்குப் பள்ளத்தாக்கு சென்று திரும்பினோம். சில திட்டமிடல் கோளாறுகளால் பெரும் பதற்றத்துடன் தொடங்கி, நடந்து, நிறைவடைந்த சுற்றுலா. எனினும், குறையொன்றுமில்லை.
பழைய (பிரிக்கப்படாத) ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நான் இரண்டரை ஆண்டுகள் வசித்துள்ளேன். ஆனால் புதிய ஆந்திரப்பிரதேசத்துக்கு இப்போதுதான் முதன்முறை செல்கிறேன். அங்கு நான் கவனித்தவற்றைப்பற்றிச் சில சிறு குறிப்புகள்:
1
விசாகப்பட்டினத்தில் திரும்பிய பக்கமெல்லாம் சிலைகள், பெரும்பாலும் பொன்வண்ணம் பூசப்பட்டவை. ஆளுயரச் சிலைகள், மார்பளவுச் சிலைகள்… பெரும்பாலும் என்.டி.ஆர், வொய்.எஸ்.ஆர், ஓரிடத்தில் இந்திராகாந்திகூடத் தென்பட்டார். சிலையில்லாத ஒரு போக்குவரத்து முனையைக்கூட நான் காணவில்லை.
2
இங்கு தலைவர்களை “Sir” என்று அழைக்கும் பண்பாடு மிகுந்திருப்பதுபோல் தோன்றுகிறது. எந்த அரசியல் பதாகையைப் பார்த்தாலும் Dear CM Sir, Happy Birthday MLA Sir, Welcome MLC Sir என்று சார், சார், சார்…
3
பல இடங்களில் என். டி. ராமராவ், சந்திரபாபு நாயுடு இருவரையும் ஒரே பதாகையில் பார்த்துத் திகைத்தேன். அங்கு இதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்போல.
4
எங்கு நோக்கினும் பல வண்ண விளக்குகள், அவற்றால் அலங்கரிக்கப்படாத வணிக வளாகங்களைக் காண்பது அரிது.
5
விமானத்திலிருந்தும் பின்னர் வண்டிகளிலிருந்தும் நேரில் சென்றும் பார்த்த விசாகப்பட்டினத்தின் கடல், கடற்கரைகள், மலைகள் நிறைந்த புவியியல் பேரழகு. குறிப்பாக, ஸ்கேல் வைத்துக் கோடு கிழித்ததுபோல் நேராக இல்லாமல் விதவிதமாக வளைந்து திரும்புகிற, சடாரென்று கடலுக்குள் பாறைகளாலான ஒரு கையை நீட்டி மீள்வதுபோன்ற கரையோரம் ஒரு குழந்தையின் கிறுக்கலைப்போன்ற வசீகரத்துடன் இருந்தது.
6
இது ஒரு ராணுவத் தலம் என்பதால் போர் விமானம் ஒன்றையும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றையும் அருங்காட்சியகங்களாக மாற்றிவைத்திருக்கிறார்கள். இரண்டிலும் நீண்ட வரிசைகள், எனினும், காத்திருந்து பார்க்கவேண்டிய அரிய காட்சிகள்.
7
ஊருக்கு வெளியில் Thotlakonda என்ற புத்த மத வழிபாட்டுத் தலம் உள்ளது. அங்கு சென்று திரும்ப வண்டி கிடைப்பது சற்றுக் கடினம். ஆனாலும் எப்படியாவது சென்று பாருங்கள், மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ள எழிலான இடம், வரலாற்றுப் பதிவுகள் நிறைந்தது.
மற்ற பல கோயில்களும் இங்குண்டு. குறிப்பாக, திருமால் வராக நரசிம்மராகக் காட்சி தரும் “சிம்மாசலம்”, கனக மகாலட்சுமி ஆலயம். எங்களுக்குச் சிம்மாசலம் செல்ல நேரம் ஒத்துழைக்கவில்லை. திருமகளைப் பார்த்தால் திருமாலைப் பார்த்ததுபோல் என்று எண்ணிக்கொண்டு கனக மகாலட்சுமியைக் கண்குளிரத் தரிசித்தோம்.
8
விசாகப்பட்டினத்திலும் சரி, அரக்குப் பள்ளத்தாக்கிலும் சரி, மக்கள் பெரும்பாலும் தூய தெலுங்குதான் பேசுகிறார்கள், ஆங்கிலக் கலப்பு உண்டு, ஆனால் ஹிந்திக் கலப்பு குறைவு. நாம் ஹிந்தியில் ஏதாவது கேட்டால் பத்துக்கு மூன்று பேர் புரிந்துகொண்டு தெலுங்கில் பதில் சொல்கிறார்கள், ஒருவர் ஹிந்தியில் பதில் சொல்கிறார், மற்றவர்கள் நட்பாகச் சிரிக்கிறார்கள்.
ஆனால், உதவும் மனப்பான்மையை எங்கும் கண்டேன். நாங்கள் அவர்களுக்குப் புரியாத மொழியில் வழி கேட்டபோதும் சிரமப்பட்டு முயற்சி எடுத்துக்கொண்டு எங்களுக்கு உதவாத ஒரு நபரைக்கூட இந்தப் பயணத்தில் நாங்கள் சந்திக்கவில்லை.
9
கடலோர நகரம் என்பதால் அசைவ உணவு புகழ் பெற்றுள்ளது. சைவம் கிடைக்கும். ஆனால் சைவம்மட்டும் சமைக்கிற இடத்தில்தான் உண்பேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடித்தால் சிரமம்தான். மூன்று நாள் ஊர்சுற்றலில் நான் மொத்தமாக 4 சைவ உணவகங்களைமட்டும்தான் பார்த்தேன்.
ஆனால், தங்குவதற்கு எந்தச் சிரமமும் இல்லை. இது சுற்றுலா நகரம் என்பதால் எல்லா பட்ஜெட்டிலும் சிறிய, நடுத்தர, பெரிய தங்குமிடங்கள் ஊர்முழுக்க இருக்கின்றன, எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் ஓரிரு லாட்ஜ்களைப் பார்ப்பீர்கள்!
10
ஊருக்குள் சுற்றிவர ஷேர் ஆட்டோ சிறந்தது. ஒருவருக்குச் சுமார் 10, 15, 20 ரூபாய் வசூலிக்கிறார்கள், குடும்பமாகச் சென்றால்கூட, நபர்களின் எண்ணிக்கையை வைத்துதான் கட்டணம் சொல்கிறார்கள். ஐந்து விநாடிக்கு ஒரு ஷேர் ஆட்டோ வந்துகொண்டே இருப்பதால்தானோ என்னவோ, பேருந்துகளில் அவ்வளவாகக் கூட்டமில்லை.
11
ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா என்று சுற்றிப் பல மாநிலங்கள் இருப்பதால் கலவையான மக்களைப் பார்க்கலாம். சற்றுத் தொலைவிலுள்ள வங்காளத்தின் தாக்கத்தைக்கூடப் பல இடங்களில் காண இயன்றது.
12
அரக்குப் பள்ளத்தாக்குக்குச் செல்ல ரயில் உண்டு. ஆனால் அதன் நேரக்கணக்கு சற்று விநோதமானது. அதனால் நாங்கள் காரில் சென்று, பேருந்தில் திரும்பினோம். சிறிய, அழகான மலைப்பாதை, வழியில் ஊர்கள் அவ்வளவாக இல்லை.
13
விசாகப்பட்டினத்திலிருந்து அரக்குப் பள்ளத்தாக்கு செல்லும் வழியில் உள்ள பொர்ராக் குகைகளை எல்லாரும் பார்க்கவேண்டும். ‘பொர்ரா’ என்றால் ஒடிய மொழியில் துளை என்று பொருளாம். பல்லாயிரம் ஆண்டுகள் நீரோட்டத்தால் மலையில் இயற்கையாக உருவான மிகப் பெரிய துளைதான் இது. இக்குகைகளின் உட்சுவர்களில் இயற்கையாக அமைந்திருக்கும் பலவிதமான வடிவங்கள் அனைத்தும் அத்தனை அழகு. மக்கள் நன்கு நடந்து சென்று பார்த்து ரசிக்கும்படி வழிசெய்துள்ளார்கள்.
14
டிசம்பரில்கூட அரக்குப் பள்ளத்தாக்கு பெங்களூரைப்போன்ற வானிலையுடன்தான் உள்ளது. ஆனால், சுற்றிலும் மலைகள், அதிகாலைப் பனி, ஆங்காங்கு திடீரென்று எதிர்ப்படும் ஓடைகள் போன்றவற்றை நன்கு ரசிக்கலாம். முதன்முறையாக Camp Fire நெருப்பில் அகலாது அணுகாது குளிர்காய்ந்தோம்.
இவ்வூர் காஃபிக்குப் புகழ் பெற்றது என்றார்கள், அதேபோல் இங்கு புகழ் பெற்றுள்ள வேறு சில உள்ளூர் உணவுகள்: மூங்கிலில் சமைக்கும் பிரியாணி, Madugula என்ற அல்வா.
15
ஆங்காங்கு அருவிகள் உள்ளன. நாங்கள் Chaprai, Ranajilleda என்ற இரண்டு அருவிகளைப் பார்த்தோம். அவை அளவில் சிறியவையாக, ஆனால் நன்கு நேரம் செலவிடக்கூடியவையாக இருந்தன. மிகப் புகழ் பெற்ற Katiki என்ற அருவியைப் பார்க்க நேரம் அமையவில்லை.
16
Chocolate Factory என்ற இடத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள் உள்ளன, சாக்லெட் எப்படித் தயாராகிறது என்பதை மிக அழகாக விளக்கும் சிறு கண்காட்சியும் உள்ளது. குறிப்பாக, இந்த இடத்தின் வடிவமைப்பு எனக்கு மிகப் பிடித்திருந்தது, மிகுந்த அழகியல் நுண்ணுணர்வுடன் ஒருவர் இதைச் செய்திருக்கிறார் என்பது உறுதி. (அதேபோல், விசாகப்பட்டின விமான நிலையத்தில் இருந்த சுவர் ஓவியங்கள், சிற்பங்களும் மிக அழகு.)
17
அரக்கு பழங்குடியின அருங்காட்சியகம் (Arakku Tribal Museum) நீங்கள் கண்டிப்பாகக் காணவேண்டியது. இங்கு வசிக்கும் மக்களுடைய பழக்கவழக்கங்களை, பொருட்களை மிக அழகாகவும் தெளிவாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் ஒன்று, அருங்காட்சியகம் என்று சொல்லி நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு அதைப் பின்னால் எங்கோ ஒளித்துவைத்திருக்கிறார்கள். செல்லும் வழியில் ஏகப்பட்ட விளையாட்டுகள், கடைகள், கவனச் சிதறல்கள்… அனைத்தையும் கடந்து அருங்காட்சியகத்துக்குச் சென்றால் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.
அங்கு பார்த்த ஒரு சுவையான பழக்கம்: இங்குள்ள பழங்குடியினருடைய திருமணத்தின்போது மாப்பிள்ளையும் பெண்ணும் வாயில் நீரை ஊற்றிக்கொண்டு ஒரே நேரத்தில் ஒருவர் முகத்தில் ஒருவர் அதைத் துப்புகிறார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?
18
ஒருவர் இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளில் தேனை ஊற்றி நிரப்பி, அவற்றை ஒரு நீண்ட கழியின் இரு முனைகளில் தொங்கவிட்டுக்கொண்டு, அந்தக் கழியைத் தோளில் சுமந்து நடப்பதைக் கண்டு வியந்தோம். எந்த விநாடியில் தேன் வழிந்துவிடுமோ, பையின் காது பிய்ந்துவிடுமோ என்றெல்லாம் நாங்கள் பதறினாலும், அவர் முகத்தில் எந்த அச்சமும் இல்லை. இப்படி மக்கள் காவடி முறையில் பொருட்களைச் சுமந்துசெல்வது இங்கு மிக இயல்பான காட்சி என்று பின்னால் தெரிந்துகொண்டோம்.
19
அரக்குப் பள்ளத்தாக்கைக் கூடாரச் சிற்றூர் என்று சொல்லலாம். அங்கு செல்லும் வழியிலும் ஊருக்கு வெளியிலும் ஏராளமான கூடாரங்கள். ஓரிடத்தில் கப்பலில் வரும் Container பெட்டிகளை வரிசையாக அடுக்கி அவற்றைத் தங்குமிடமாக மாற்றியிருந்தார்கள்.
20
இங்கு திம்சா என்ற நடனம் மிகுந்த புகழ்பெற்றுள்ளது. நாங்கள் அதை ஓவியங்கள், சிற்பங்களில்தான் பார்த்தோம், நேரில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.