நம் சமூகத்தில் புத்தகம் படிக்கிறவர்களைப்பற்றிய ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளது என்று எழுத்தாளர் சி. சரவணகார்த்திகேயன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாள்தோறும் சந்திக்கிற பிரச்சனை இது.
எடுத்துக்காட்டாக, நான் சில மாதங்களுக்குமுன் ஒரு புதிய அலுவலகத்தில் சேர்ந்தேன். முந்தைய 16 வாரங்களில் குறைந்தது 100 பேரைப் புதிதாகச் சந்தித்திருப்பேன். இவர்களில் 90% பேர் இப்படிதான் பேச்சைத் தொடங்கினார்கள், ‘உங்க Introduction Email படிச்சேன். நிறைய புக் படிப்பேன்னு எழுதியிருந்தீங்க. நான்ல்லாம் ஒரு புக்கூடப் படிச்சதில்லை.’
மேற்சொன்ன மூன்று சொற்றொடர்களில் மூன்றாவது சொற்றொடர் ஏன் எழுகிறது என்று ஒரு விநாடி யோசியுங்கள். அது உரையாடலுக்கு எந்த மதிப்பையும் கூட்டுவதில்லை. அவர் புத்தகம் படிக்கவில்லை என்பதால் நான் அவருக்குப் புத்தகப் பழக்கத்தை வலிய ஊட்டப்போவதில்லை. புத்தகம் படிக்கவில்லை என்பதை எண்ணி அவருக்குக் கழிவிரக்கமோ குற்றவுணர்ச்சியோ இருக்கிறது என்று வைத்துக்கொண்டால்கூட, அதைச் சொன்னால் அது ஓடிவிடுமா என்ன?
மாறாக, ‘நான்ல்லாம் ஒரு புக்கூடப் படிச்சதில்லை. எப்படிப் படிக்க ஆரம்பிக்கலாம்ன்னு ஒரு யோசனை சொல்லுங்க’ என்று கேட்கலாம், அல்லது, ‘நான்ல்லாம் ஒரு புக்கூடப் படிச்சதில்லை. உங்க மெயிலைப் படிச்சப்புறம் ஆர்வம் வருது. நாளைக்கே ஆரம்பிக்கப்போறேன்’ என்று சொல்லலாம். அப்படியெல்லாம் யாரும் சொல்லி நான் கேட்டதில்லை.
ஆக, படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இப்படிச் சொல்வதன் நோக்கம், ‘நான் ஒரு புக்கூடப் படிச்சதில்லை. நல்லாதானே இருக்கேன்?’ என்பதுதான். சிலர் இன்னும் கீழிறங்கி, ‘நீ இவ்ளோ புக் படிச்சு என்ன சாதிச்சே?’ என்றுகூடக் கேட்பதுண்டு.
பல ஆண்டுகளுக்குமுன் என்னுடைய சக ஊழியர் ஒருவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இப்போது நினைவுக்கு வருகிறது, ‘நீங்க புக் படிக்கிற, எழுதற நேரத்துல XYZ Certificationக்குத் தயார் செஞ்சு, தேர்வு எழுதிப் பாஸ் பண்ணீங்கன்னா அஞ்சு வருஷத்துல உங்க சம்பளம் டபுள் ஆகிடும். அதே உழைப்பு, ஆனா ரெண்டு மடங்கு சம்பளம். உங்க நேரத்தை நீங்க எதுக்குக் கொடுக்கணும்ன்னு நல்லா யோசிச்சுப் பாருங்க, எது நல்ல Return on Investment?’
அந்த ஊழியர் வில்லன் இல்லை. அவர் என்மீதுள்ள அக்கறையில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், படிப்பின் சுகம் தெரியாத ஒருவருக்கு அதில் உள்ள Return on Investmentஐ விளக்க இயலாது.
படிப்பினால் அறிவு வளர்வது, பிறருடைய பார்வைகளைப் புரிந்துகொள்ள இயலுவது, உலகத்தைப்பற்றிய அறிந்துகொள்ளல் விரிவடைவது போன்றவை ஒருபுறமிருக்க, முதன்மையாக, படிக்கிற பழக்கம் உள்ளவனு(ளு)க்கு வீண் பொழுதுபோக்குகளுக்கு நேரம் இருக்காது. அதனால் அவன் பிறரைவிட அறிவாளியாக இருக்க வாய்ப்பு மிகுதி. அது அவனுக்குச் சுகம், பிறருக்குப் புரியாது.
அவனுக்கும் கீழ்மைகள் இருக்கும். அது வேறு விஷயம். அவை படிப்பால் வருகிறவை இல்லை, படிப்பைத் தாண்டியும் வருபவை.
உலகத்தின் அளவுகோலில் பார்த்தால் படித்து அறிவு பெறுவது என்பது மிகுந்த உழைப்பு, மிகுந்த நன்மையைத் தருகிற விஷயம். மக்கள் குறுக்குவழிகளை (குறைந்த உழைப்பு, மிகுந்த நன்மை) மிகவும் விரும்புகிறார்கள், அதனால்தான் படித்தல் பழக்கம் கேள்விக்கு ஆளாகிறது.
நீங்கள் என்னவோ செய்துகொள்ளுங்கள், எக்காரணம் கொண்டும் உங்களுடைய பிள்ளைகளின் படிக்கும் பழக்கத்தைமட்டும் தடுத்துவிடாதீர்கள். ஏனெனில், ஒருபோதும் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அதன் மகிழ்ச்சியை அறிந்தும் வேறு காரணங்களால் அதை நிறுத்தியவர்களுக்கு அது ஒரு வாழ்நாள் குற்றவுணர்ச்சியாக இருக்கும். அப்படிப் பலரை வாரந்தோறும் சந்திக்கிறேன்.
பின்குறிப்பு: இது தொடர்பான என்னுடைய இரண்டு யூட்யூப் உரைகளை இங்கு கொடுத்துள்ளேன். அவற்றையும் கேளுங்கள், குறிப்பாகப் பெற்றோர் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்.
உரை 1: குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தைக் கொண்டுவருவது எப்படி? பெற்றோருக்கான சில குறிப்புகள்