நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெமிங்வே (Ernest Hemingway) ஓர் இதழாளராகதான் தன்னுடைய எழுத்துப் பணியைத் தொடங்கினார். அப்படி அவர் முதன்முதலாகப் பணியாற்றிய இதழின் பெயர், The Kansas City Star.
அந்த இதழின் நிறுவனரும் முதல் ஆசிரியருமான வில்லியம் ராக்ஹில் நெல்சன் என்பவர் அங்கு பணியாற்றும் இதழாளர்களுக்காக 110 விதிமுறைகளை எழுதிவைத்திருந்தாராம். புதிதாக அங்கு சேர்கிற எல்லாரும் இவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு கண்டிப்பாகப் பின்பற்றவேண்டுமாம்.
“நன்றாக எழுதுவது எப்படி என்பதுபற்றி அன்றைக்கு நான் The Kansas City Starல் கற்றுக்கொண்ட விதிமுறைகள் மிகச் சிறந்தவை” என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஹெமிங்வே, “திறமையுள்ள ஒருவர், தான் உணர்ந்ததை உண்மையாக எழுத விரும்புகிற ஒருவர் அந்த விதிமுறைகளைப் பின்பற்றினால் போதும், அவருடைய எழுத்து தானே மேம்பட்டுவிடும்.”
ஹெமிங்வே இப்படிப் புகழும் அளவுக்கு அந்த வில்லியம் ராக்ஹில் நெல்சன் என்னென்ன விதிமுறைகளை எழுதிவைத்திருந்தார் என்று நமக்கு முழுமையாகத் தெரியவில்லை. சில பேட்டிகள், நூல்களில் ஆங்காங்கே சில விதிமுறைகள்மட்டுமே கிடைக்கின்றன:
- சிறிய வாக்கியங்களைப் பயன்படுத்துங்கள்.
- உங்கள் கட்டுரையின் முதல் பத்திகள் அளவில் சிறியவையாக இருக்கட்டும்.
- மொழியை அதன் முழு ஆற்றலுடன் பயன்படுத்துங்கள்.
- உங்கள் எழுத்து நேர்ச்சிந்தனையோடு இருக்கட்டும், எதிர்மறையாக இருக்கவேண்டாம்.
- எழுத்தில் பழைய பயன்பாடுகளை விலக்கிவிடுங்கள், புதிய பயன்பாடுகளைத்தான் வாசகர்கள் ரசிப்பார்கள்.
- நடப்பதை அப்படியே இயல்பாகச் சொல்லுங்கள்; அவற்றை விளக்குவதற்காக Adjectives எனப்படும் பெயரடைகளைப் பயன்படுத்தவேண்டாம், குறிப்பாக, பிரமாதம், அட்டகாசம், மிகச் சிறப்பு, பிரமாண்டம் என்றெல்லாம் எழுதித் தள்ளாதீர்கள்.
குறிப்பு நூல்கள்: