அமேசான் எழுத்து என்று ஒரு வகை இருக்கிறது. அதாவது, அந்நிறுவனத்தில் பணிபுரிவோர் அலுவல் விஷயங்களை எழுதும்போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் தனித்துவமானவை, பயனுள்ளவை. சுருக்கத்தையும் தெளிவையும் இலக்குகளாகக் கொண்ட இந்த எழுத்து உத்திகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பின்பற்றப்படுவதாலும், அவ்வப்போது செழுமைப்படுத்தப்படுவதாலும் அந்நிறுவனத்துக்குள் எல்லாரும் ஒரே மொழியைப் பேசுவதும் புரிந்துகொள்வதும் இயல்பாக நடக்கிறது, தகவல் தொடர்புச் சிக்கல்கள்/குழப்பங்கள் குறைகின்றன.

இந்த அமேசான் எழுத்தின் சில உத்திகளை அவர்கள் தங்கள் அலுவலகத்துக்கு வெளியிலும் பதிவுசெய்கிறார்கள். அதாவது, அவை பொதுவான தகவல் தொடர்புக்கும் பொருந்தும் என்பதால் எல்லாரையும் பின்பற்றச்சொல்லிப் பரிந்துரைக்கிறார்கள்.
அவ்வகையில் இன்று அமேசான் வெளியிட்டிருக்கும் ஒரு குறிப்பு எனக்கு மிகவும் பிடித்தது: யாராவது உங்களிடம் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டால் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். அதாவது, இந்த நான்கில் ஒரு பதிலைச் சொல்லுங்கள்:
1. ஆம்
2. இல்லை
3. ஓர் எண் (அல்லது, ஒரு புள்ளிவிவரம்)
4. எனக்குத் தெரியவில்லை. ____ம் தேதிக்குள் விசாரித்துச் சொல்கிறேன்.
அமேசான் அனுமதித்தால் நான் இவற்றுடன் இன்னொரு பதிலையும் சேர்ப்பேன்:
5. இதற்குப் பதில் சொல்லவேண்டியவன் நான் அல்லன். _____ஐக் கேளுங்கள்.