2010ம் ஆண்டுத் தொடக்கத்தில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அது 2011ல் வெளியான ஒரு நூலில் இடம்பெற்றது. பதிப்பகத்தார் இரண்டு பிரதிகளும் ஓராயிரம் ரூபாய்ப் பணமும் அனுப்பினார்கள். இது உடனடி மகிழ்ச்சி.
நான் அந்தக் கட்டுரையை எழுதிக் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் நிறைவடையப்போகும் நேரத்தில், இன்று காலை ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. ‘என்னுடைய மிகப் பெரிய வாழ்க்கைக் குழப்பம் ஒன்றை உங்கள் கட்டுரை தீர்த்துவைத்திருக்கிறது, நன்கு வழிகாட்டியிருக்கிறது. மிக்க நன்றி’ என்று ஒருவர் எழுதியிருக்கிறார்.
வியப்பான விஷயம், அந்தக் கட்டுரைத் தொகுப்பில் பல எழுத்தாளர்கள் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இருந்தன. அவற்றில் என்னுடைய கட்டுரையைப் படித்துப் பயன் பெற்ற இவருக்கு, நூலின் பின்பகுதியில் ஏதோ ஒரு மூலையில் பொடி எழுத்தில் அச்சிடப்பட்டிருந்த என்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்து, எனக்கு எழுதி நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இது வைப்பு நிதியில் பாதுகாக்கப்பட்டுப் பதினான்காண்டுகளில் பலமடங்காக உயர்ந்த பெருமகிழ்ச்சி!