சில நாட்களுக்குமுன்னால் ஒரு கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அதில் இப்படி ஒரு வரி:
She asked shyly.
அதை நான் இப்படி மொழிபெயர்த்திருந்தேன்:
இன்று இந்தக் கதையை எழுதியவர் என்னைத் தொடர்புகொண்டார். ‘அந்த 4வது பக்கத்துல 48வது வரி சரியா இருக்கான்னு கொஞ்சம் பாருங்க’ என்றார்.
பார்த்தேன். சரியாகதான் இருந்தது. ‘ஏன்? அந்த வரியில என்ன பிரச்சனை?’ என்றேன்.
‘தப்பா நினைச்சுக்காதீங்க’ என்றார் அவர். ‘எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆனா, இந்தத் தமிழ்க் கதையில எல்லாம் சரியா இருக்கான்னு நான் உறுதிப்படுத்தணும். அதனால, உங்க மொழிபெயர்ப்பை வரி வரியா ஒரு online translation toolல கொடுத்து இங்கிலீஷ்ல படிச்சுப் பார்த்தேன். அந்த 48வது வரியில Coinன்னு என்னவோ வருது. அதுதான் குழப்பமா இருக்கு.’
‘காயினா?’ என்று நான் திகைத்தேன். மீண்டும் அந்த வரியைப் பார்த்ததும் புரிந்துவிட்டது, நாணத்தை அந்த இணைய மொழிபெயர்ப்புக் கருவி நாணயம் என்று எடுத்துக்கொண்டு ‘She asked with a coin’ என்று அந்த வரியை மொழிபெயர்த்திருக்கிறது. இதை எப்படி அவருக்கு விளக்குவது?
சட்டென்று அந்த வரியை ‘அவள் வெட்கத்துடன் கேட்டாள்’ என்று மாற்றிக் கொடுத்தேன், ‘இது சரியா இருக்கான்னு பாருங்க’ என்றேன்.
‘பிரமாதம். ரொம்ப நன்றி’ என்றார் அவர். ‘இப்ப எல்லாம் சரியா இருக்கு. என்ன மந்திரம் போட்டீங்க?’
‘அதை வெளியில சொல்லமுடியாதுங்க, வெட்கக்கேடு’ என்றேன்.