ஸ்டார்பக்ஸுக்கு இந்தியர் தலைவராவதெல்லாம் சரி. அங்கு ஓர் இந்தியக் காஃபி எப்போது கிடைக்கும்?
இங்குள்ள பலருடன் ஒப்பிடும்போது என்னுடைய அமெரிக்கப் பயணங்கள் மிகச் சிறியவை. ஆனால் அந்தச் சில வாரங்களில் எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வியப்பு, ‘இந்த ஊரில் காஃபி என்ற பெயரில் குடிக்கப்படுகிற நீர்மம் உண்மையில் மனிதப் பயன்பாட்டுக்கு உரியதுதானா?’
ஒரு பழைய பாடலில், ‘கம்பனும் புலவன், நானும் புலவன் என்றால் அது எப்படி ஐயா நியாயம்?’ என்று எளிய புலவர் ஒருவர் வருந்துவார். அதைப்போல, ஒருவேளை அந்தக் காஃபி நம் ஊர்க் காஃபியைச் சந்தித்தால் ‘நாங்கள் இருவரும் ஒரே காஃபிக்கொட்டையிலிருந்து பிறந்தவர்கள்தான் என்றாலும் இதற்கும் எனக்கும் சுவையில் எந்தத் தொடர்பும் இல்லை. தயவுசெய்து எனக்கு வேறு பெயர் வைத்துவிடுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்கும்.
இந்த விஷயத்தில் நாம் பெருமைப்பட ஏதுமில்லை. பர்கர், பிட்சா, பாஸ்தா போன்றவற்றை நம் ஊர்ச் சுவையில் வழங்குகிறோம் பேர்வழி என்று கண்டபடி கெடுத்துவைத்திருக்கிறோம். குறிப்பாகப் பன்னீரை நறுக்கிப் போடுகிற எல்லா வெளிநாட்டுப் பண்டங்களும் உடனடியாகச் சுவை அலகில் ஏழெட்டுப் படி இறங்கிவிடுகின்றன.
யாரும் இருக்கும்விதத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்யம்தான். பல நேரங்களில் ஃப்யூஷன் கன்ஃப்யூஷனுக்குதான் வழிவகுக்கிறது.
பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை ஓர் அமெரிக்கர் எழுதியிருந்தால், ‘இந்தியாவில் கிடைப்பதெல்லாம் காஃபியா? வெறும் குப்பை’ என்று எழுதியிருக்கக்கூடும் என்பதை நன்கு அறிவேன். அப்படி விருப்பங்கள் ஆளாளுக்கு மாறுகின்றன என்பதுதான் இதன் மையக் கருத்து, யாருடைய விருப்பத்தையும் இழிவுபடுத்துவது இல்லை.