எங்கள் அணியில் புதிதாக ஒருவர் சேர்ந்திருக்கிறார். என்னுடைய மேசைக்குச் சற்றுத் தள்ளிதான் அவருடைய மேசை. அதனால், எல்லாரும் அவரை வரவேற்றுப் பேசுகிற குரல்கள் காலைமுதல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றன.
அவற்றுள் ஒரு குரலைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அந்தப் பெண் இந்தப் பெண்ணுடன் 2 நிமிடம்தான் பேசினார். ஆனால், அந்த இரண்டு நிமிடத்துக்குள் அவர் விசாரித்துத் தெரிந்துகொண்டவை:
1. நீ எந்த ஊர்
2. நீ இதற்குமுன் எங்கு வேலை செய்தாய்? எத்தனை ஆண்டுகள்?
3. உன்னுடைய சிறப்புத் திறன்கள் என்னென்ன?
4. நீ பெங்களூருக்குப் புதியவளா?
5. எங்கு தங்கப்போகிறாய்? வீடு தேட ஏதேனும் உதவி வேண்டுமா?
6. அலுவலக வண்டிக்குப் பதிவு செய்துவிட்டாயா? அது தொடர்பாக ஏதேனும் வழிகாட்டுதல் வேண்டுமா?
7. அணியில் எல்லாரையும் சந்தித்துவிட்டாயா? நான் யாரையாவது உனக்கு அறிமுகப்படுத்தவேண்டுமா?
8. உனக்கு வேறு எந்த உதவியோ தகவலோ தேவைப்படுகிறதா?
இத்தனைக்கும் அவர் இந்தப் பெண்ணின் மேலாளர் இல்லை, சக பணியாளர்தான். மேற்சொன்ன எதையும் அவர் அதிரடியாகக் கேட்கவில்லை, நட்பாகவும் அக்கறையாகவும்தான் கேட்டார். புதிய சூழலில் இருக்கும் ஒருவருடைய பதற்றத்தை இந்த அணுகுமுறை எந்த அளவுக்குத் தணித்திருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.
நான் இந்தப் பெண்ணைக் கண்டு வியப்பதற்கு இன்னொரு காரணம், இந்தக் கலையில் நான் ஒரு பூஜ்ஜியம். அல்லது, மைனஸ் ஒன்று. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கார்ப்பரேட் உலகில் இருக்கிறேன். ஆனால், அலுவலகத்தில் புதிதாக ஒரு முகத்தைப் பார்த்தால் எதிர்த்திசையில் ஓடிவிடுவேன்.
இங்கு ‘ஓடிவிடுவேன்’ என்பது மிகைப்படுத்தும் சொல் இல்லை. உண்மையில் புதியவர்களைச் சந்திக்காமல் எதிர்த்திசையில் சுற்றி நடப்பதுதான் என் வழக்கம். அவர்களிடம் என்ன பேசுவது, அவர்கள் ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்று உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிவிடும். அவர்களாக வந்து ஹலோ சொன்னாலன்றி, அல்லது யாராவது அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினாலன்றி வலியச் சென்று பேசுவதற்கு எனக்கு வாய் வராது. ஒருவேளை பேசினாலும் மேலுள்ளதுபோன்ற தனிப்பட்ட தகவல்களையெல்லாம் கேட்கத் தயங்குவேன்.
நான் இதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, என்னுடைய மேலாளர்கள் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளியிருக்கிறார்கள். ஆனால், இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை. புதிய அறிமுகங்கள் என்றால் எனக்கு நடுக்கம்தான். மேலுக்குச் சிரிப்பேன், உள்ளுக்குள் பதறுவேன். புதிதாக என்னுடன் பழகுகிற யாரும் அவர்களாகத்தான் தேர் இழுக்கவேண்டும், நான் சிறிதும் ஒத்துழைக்கமாட்டேன். பிடிவாதம் இல்லை, என்னால் முடியாது.
யோசித்துப்பார்த்தால், இத்தனை ஆண்டுகளில் அலுவலகத்திலும் அதற்கு வெளியிலும் இதைப் புரிந்துகொண்டு (அதாவது, பொறுத்துக்கொண்டு) எனக்கென இருமடங்கு சிரமப்பட்டுத் தேரிழுத்த நண்பர்கள்தான் எத்தனை! அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.