இன்று எங்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய கலாட்டா.
யாரோ ஒரு புண்ணியவான் காலை எழுந்து பல் தேய்த்த கையோடு ஒரு மின்னஞ்சல் குழுவைத் தொடங்கி அதில் 3000 பேரைச் சேர்த்துவிட்டார். வரிசையாக எல்லாருக்கும் பலப்பல மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கிவிட்டார்.
இவை எல்லாமே மொக்கை ஃபார்வர்ட்கள் இல்லை, அலுவல் தொடர்பான மின்னஞ்சல்கள்தாம். ஆனால், எல்லாருக்கும் அவற்றில் ஆர்வம் இருக்கும் என்று சொல்லமுடியாதல்லவா? அனுமதியில்லாத இந்தத் தொடர் மின்னஞ்சல் தாக்குதலால் அந்தக் குழுவில் இருந்த பலரும் கடுப்பாகிவிட்டார்கள்.
அந்த 3000 பேரில் ஒருவர், இந்த மின்னஞ்சல் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்தார். குத்துமதிப்பாக ஏதோ ஒரு மின்னஞ்சலைத் திறந்து அதற்கு “Unsubscribe” என்று பதில் அனுப்பினார். அந்தப் பதிலும் அந்த 3000 பேருக்கும் சென்று சேர்ந்தது.
அவ்வளவுதான், இந்தக் குழுவிலிருந்து வெளியேறுவதற்கான வழி இதுதான் போல என்று மக்கள் நம்பிவிட்டார்கள், வரிசையாக Unsubscribe, Unsubscribe என்று அதே குழுவுக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கிவிட்டார்கள், இவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கானோருக்குச் சென்று சேர்ந்தன, எல்லாருடைய மின்னஞ்சல் பெட்டிகளும் நிரம்பத் தொடங்கின. இதைப் பார்த்துக் கடுப்பான சிலர் அதே மின்னஞ்சல் குழுவுக்கு இப்படிப் பதில் எழுதினார்கள்: ‘நண்பர்காள், நீங்கள் Unsubscribe என்று எழுதினால் உங்களை இந்தக் குழுவிலிருந்து விலக்கிவிடமாட்டார்கள். முதலில் இதை நிறுத்தித் தொலையுங்கள்.’
சிலர் நகைச்சுவையாகவும் இதற்குப் பதில் எழுதினார்கள், ‘அன்பர்களே, இந்தக் குழுவில் Unsubscribe என்று பதில் அனுப்புகிறவர்களுக்கு இந்த மாதச் சம்பளம் வராது என்று அறிவித்திருக்கிறார்கள். தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஆனால், இப்படி நல்லெண்ணத்தோடும் நகைச்சுவையாகவும் பதில் எழுதியவர்களால்கூட எந்தப் பலனும் ஏற்பட்டுவிடவில்லை. இவர்களுடைய அறிவுரைகளும் அதே மூவாயிரத்துச் சொச்ச மின்னஞ்சல் பெட்டிகளில் சென்று உட்கார்ந்ததுதான் மிச்சம்.
நிறைவாக, யாரோ ஒருவர் அறிவோடு செயல்பட்டார், ‘நண்பர்களே, உங்களுக்குப் பிடிக்காத ஒரு மின்னஞ்சல் குழுவிலிருந்து வெளியேறுவதற்கு இந்த இணைப்பைக் க்ளிக் செய்யுங்கள்’ என்று தெளிவாகப் பதில் எழுதினார். அதன்பிறகுதான் அந்த மின்னஞ்சல் தாக்குதல் நிறைவடைந்தது.
இதிலிருந்து தெரியவரும் நீதி, சிலர் முட்டாள்தனமாகச் செயல்படுகிறார்கள் என்றால், அதைப் பார்த்துப் புலம்புகிறவர்களாலோ, சினம் கொள்கிறவர்களாலோ, கேலி செய்கிறவர்களாலோ சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை; ‘இப்படிச் செய்யாதே’ என்று கத்துவதைவிட, ‘இப்படிச் செய்’ என்று எடுத்துச்சொன்னால் பலன் இருக்கும்.
1 Comment