ஒருவர் பல தவறுகளைச் செய்கிறார். அவரைத் திருத்தவேண்டும், நல்ல வழிக்குத் திருப்பவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதை எப்படிச் செய்வீர்கள்?
இது ஒரு பெரிய பிரச்னையா? அவர் செய்வது தவறு என்பது உண்மைதானே? நேராகப் போய் அதை அவருக்குச் சுட்டிக்காட்டி அறிவுரை சொன்னால் போதும், அவர் திருந்திவிடுவார். அப்படியும் திருந்தாவிட்டால் திட்டலாம், நாலு அடிகூடப் போடலாம், நல்லது நடக்கவேண்டும், நமக்கு அதுதானே முக்கியம்.
ஆனால், இந்தமாதிரி திடீர்த் திருந்துதலெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். உண்மையில், தாங்கள் செய்வது தவறு என்று உள்ளுக்குள் உணர்ந்தவர்கள்கூட, அது தவறு என்று பொதுவில் ஒப்புக்கொண்டுவிடமாட்டார்கள். ஒருவேளை அது ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டாலும்கூட, ‘ஆமா, நான் அப்படிதான் செய்வேன், அதுக்கு இப்ப என்ன?’ என்றுதான் தெனாவெட்டாகக் கேட்பார்கள். அதாவது, நாம் அவருடைய பிழையைச் சுட்டிக்காட்டிய அந்தச் செயலே அவர்களை மேலும் பிழை செய்யத் தூண்டும்.
அப்படியானால், இவர்களைத் திருத்தவே முடியாதா?
திருத்தலாம். ஆனால், அதற்கு நாம் அவர்களோடு மோதக்கூடாது, அது எதிர்மறையான விளைவைத்தான் உண்டாக்கும். ‘இது தவறு’ என்று இடித்துரைப்பதைவிட, எது சரி என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது பயன் தரும்.
இதை விளக்குவதற்கு வினோபா பாவே ஒரு மிக நல்ல உவமை*யைப் பயன்படுத்துகிறார்: ஒரு பெரிய வீடு இருக்கிறது, அதைச் சுற்றி மிக உயரமான மதில் சுவர் இருக்கிறது, நீங்கள் அந்த வீட்டுக்குள் செல்லவேண்டுமென்றால், அந்தச் சுவரோடு போய் மோதி மண்டையை உடைத்துக்கொள்வீர்களா, அல்லது, அத்தனைப் பெரிய சுவரில் கதவு எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து, அந்தக் கதவின் வழியாக ஜம்மென்று உள்ளே நுழைவீர்களா?
நாம் சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் பல குறைகள் இருக்கலாம்; அவையெல்லாம் அவர்களைச் சுற்றி எழுந்து நிற்கிற மதில் சுவர்களைப் போன்றவை; அந்தக் குறைகளோடு மோதி வெல்வது சாத்தியமில்லை; அந்தச் சுவரில் எங்கேனும் ஒரு கதவு இருக்கும், அதாவது, அத்தனைக் குறைகளுக்கு நடுவில் ஓரிரு நிறைகள் இருக்கும், எப்பேர்ப்பட்ட கெட்டவருக்குள்ளும் ஒரு நல்லவர் இருப்பார், அந்தக் கதவைச் சிரமப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் போதும், சிரமமில்லாமல் உள்ளே நுழைந்துவிடலாம், அதன்பிறகு, அந்த வீட்டுக்குள் நமக்கு வேண்டிய இடத்துக்கு வசதியாகச் சென்று வரலாம். அதாவது, ஒவ்வொருவரிடமும் இருக்கிற நல்ல குணத்தைக் கண்டறிந்து, அதைப் பயன்படுத்தி அவர்களை நல்ல வழிக்குக் கொண்டுவரலாம்.
இந்தப் பழக்கத்தால் நமக்கும் ஒரு நன்மை உண்டு என்கிறார் வினோபா. அதாவது, அடுத்தவர்களுடைய குறைகளைமட்டும் பார்த்துச் சினம் கொள்ளும்போது, நமக்குள் தன்முனைப்பு (ஈகோ) பெருகுகிறது. ‘இவனைவிட நான் உயர்ந்தவன்’ என்ற செருக்கு உண்டாகிறது. அப்படியில்லாமல், எல்லாரிடமும் உள்ள நிறைகளைத் தேட ஆரம்பித்தால், நம்மைப்போலவே ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்தவர்கள்தான் என்கிற பணிவு வருகிறது.
* ‘Moved by Love‘ என்ற நூலின் முன்னுரையில், வினோபாவுடன் பல ஆண்டுகள் நேரடியாகப் பழகிய சதீஷ் குமார் என்ற சமூக சேவகர் இந்தக் குறிப்பைப் பதிவுசெய்துள்ளார்
2 Comments