Edward De Bono ஒரு மருத்துவர். ஆனால், உளவியல், எழுத்துத் துறைகளில் புகழ் பெற்றவர். 1967ல் அவர் உருவாக்கிய Lateral Thinking என்னும் மாறுபட்ட சிந்தனை உத்தி அநேகமாக எல்லாத் துறைகளிலும் இன்றுவரை பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.
இவருடைய இன்னொரு புகழ் பெற்ற உத்தி, Six Thinking Hats. இங்கு சொல்லப்படும் ‘தொப்பி’ என்பது ஒரு சிந்தனை முறை, ஆறு தொப்பிகள் என்றால் ஆறுவிதமான சிந்தனைகள். எந்தவொரு விஷயத்தைப்பற்றியும் இப்படி ஆறு விதமாகச் சிந்திக்கலாம், சிந்திக்கவேண்டும் என்ற அடிப்படையில் அவர் இந்த உத்தியை முன்வைக்கிறார்.
எடுத்துக்காட்டாக, வெள்ளைத் தொப்பி அணிந்திருக்கும்போது நம்மிடம் உள்ள பிரச்னையைப் பற்றிய தகவல்கள், புள்ளிவிவரங்களைமட்டுமே காணவேண்டும், அதாவது, உறுதிப்படுத்தப்பட்ட, ஐயத்துக்கு இடமில்லாத விஷயங்களைமட்டுமே சிந்திக்கவேண்டும். பின்னர் சிவப்புத் தொப்பி அணிந்துகொண்டு உணர்வுகளைப் பேசலாம், அதாவது, ‘நான் என்ன நினைக்கிறேன்னா’ என்று மனத்தில் இருப்பதைச் சொல்லலாம், அது நிரூபிக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை.
இப்படி வெவ்வேறு தொப்பிகள், வெவ்வேறு சிந்தனை முறைகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்து பின்பற்றும்போது, கையிலிருக்கும் பிரச்னையை எல்லாக் கோணங்களிலிருந்தும் தெளிவாகவும் முழுமையாகவும் அலச இயலும், தீர்வு கிடைக்கும் என்பதுதான் Six Thinking Hatsன் அடிப்படை. இதைப் பலமுறை பல பிரச்னைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன், பலன் கண்டிருக்கிறேன், ஒரு கட்டத்தில் அது ஓர் இயல்பான செயல்முறையாக நமக்குள் பதிந்துவிடும், அதற்கென்று தனியே மெனக்கெடாமல் தானாக இந்த ஆறு வழிகளிலும் சிந்திக்கத் தொடங்கிவிடுவோம், அதுதான் இந்த உத்தியின் வெற்றி.
1 Comment