எங்கள் கல்லூரியில் (அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி (GCT), கோயம்பத்தூர்) எங்கள் துறையின் (உற்பத்திப் பொறியியல்) இப்போதைய நான்காம் ஆண்டு மாணவர்கள் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். வழக்கம்போல் கூகுள் மீட் உபயத்தில் வீடியோக் கருத்தரங்கம்தான். கல்லூரியில் கணினி அறிவியலை முதன்மையாகத் தேர்ந்தெடுத்துப் பயிலாதவர்கள் (அதாவது, மின் பொறியியல், உற்பத்திப் பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள்) மென்பொருள் துறைப் பணிகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி என்பதுபற்றிப் பேசினேன்.
உண்மையில் இதற்கு ரகசியச் சூத்திரமெல்லாம் ஒன்றுமில்லை. அடிப்படைக் கட்டமைப்பைப் புரிந்துகொண்டு அதற்குள் ஒவ்வொரு நிலையிலும் கடின உழைப்பை அளித்தால் எந்தக் கதவும் திறந்துவிடும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. ஆகவே, இந்த அடிப்படை விஷயங்களைமட்டும் அவர்களுக்கு விரிவாக விளக்கிச்சொன்னேன்:
- மென்பொருள் பணிகள் என்னென்ன, அவற்றுக்குத் தேவைப்படுகிற/எதிர்பார்க்கப்படுகிற திறன்கள், அதைவிட முக்கியமாக, அடிப்படைப் புரிந்துகொள்ளல்கள் என்னென்ன என்பதை அந்தத் துறை சார்ந்த பலரிடம் பேசிப் புரிந்துகொள்ளலாம்; அதற்காகப் படித்து, பார்த்து, கேட்டுத் தயாராகலாம்
- பலவகைப் பணிகள் இருந்தாலும், ஒன்றிரண்டில்மட்டும் கவனம் செலுத்தலாம். எல்லாத் திசையிலும் கல் எறியலாமே என்கிற அணுகுமுறை இங்கு பயன்படாது, ஒவ்வொரு வகைப் பணிக்குமான அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளப் பல மாதங்கள் தேவைப்படும்; ஆகவே, ‘எந்த வேலை கிடைத்தாலும் செய்வேன்’ என்பதைவிட, ‘இந்த இரு வேலைகளுக்கான எதிர்பார்ப்புகளை நன்கு அறிவேன்’ என்பது சிறந்த வழி
- அநேகமாக எல்லாப் பணிகளுக்கும் தொடக்க வடிகட்டல்கள் இருக்கும். அதில் தப்பித்து அடுத்த நிலைக்குச் செல்வதற்குச் சில வகைத் தேர்வுகளுக்குத் தயாராகவேண்டும், ரெஸ்யூமை, இணையத்தில் நம் தகவல்களை (எகா: LinkedIn பக்கம், Github பக்கம் போன்றவை) ஒழுங்குபடுத்தவேண்டும்
- வேலைகள் எங்கு பட்டியலிடப்படுகின்றன (நிறுவனத் தளங்கள், LinkedIn போன்ற வலைப்பின்னல்கள், வேலை தேடல் தளங்கள், சமூக ஊடகங்கள்) என்பதை ஆராய்வதற்கு, நமக்குப் பொருந்தும் வேலைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நாள்தோறும் நேரம் ஒதுக்கவேண்டும்; (நாம் தேர்ந்தெடுத்த பணி வகையில்) எந்த அளவுக்குக் கூடுதலான எண்ணிக்கையில் விண்ணப்பம் போடுகிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு மிகுதியாகும் என்பதுதான் எளிய கணக்கு
- இந்தக் கொரோனா நேரத்திலும் வேலைத் திறப்புகள் உள்ளன; எண்ணிக்கை முன்னே, பின்னே இருக்கலாம்; ஆனால், நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை; எல்லா நிறுவனங்களுக்கும் இளம் பணியாளர்கள் உள்நுழைந்துகொண்டே இருக்கவேண்டும், இல்லாவிட்டால் அந்நிறுவனம் உறைந்து நின்றுவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். They need you as much as you need them. ஒரு நல்ல திறமையாளர் கிடைத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். ஆகவே, தயங்காமல் தேடலாம், விண்ணப்பம் போடலாம்
- நேர்காணலில் நம்மை எப்படி முன்னிறுத்திக்கொள்கிறோம் என்பதற்கு ஒரு நல்ல Pitch (அறிமுக அல்லது விளம்பரக் குறிப்பைத்) தயாரித்துக்கொள்ளவேண்டும்; அதாவது, சொந்தத் தகவல்கள், கல்லூரியில் படித்தவை, ஆர்வமுள்ள பாடங்கள், தனிப்பட்ட ஆர்வங்கள், கலந்துகொண்ட போட்டிகள், பரிசுகள் போன்றவற்றை ஓரிரு நிமிடத்துக்குச் சுருக்கமாகப் பேசலாம். இத்துடன் அந்த வேலைக்கான தேவைகளுடன் நம் திறமைகளைப் பொருத்திப் பேசினால் அதுவே ஒரு நல்ல தொடக்கத்தை அமைத்துத்தரும். ஆனால், இதற்குத் தயார் செய்துகொள்வதற்கு ஒவ்வொரு நேர்காணலுக்கு முன்பும் தனியே நேரம் செலவிடவேண்டும்
- தகவல் தொடர்பு (அதாவது, நாம் நினைத்ததை ஆங்கிலத்தில் சரியாக முன்வைத்தல்) மிக அவசியம். அதற்கு நிறையப் படிக்கவேண்டும், அதைவிட முக்கியமாக, நிறையப் பேசவேண்டும். தவறு வந்துவிடுமோ என்று தயங்கக்கூடாது, அப்படித் தயங்கினால் மொழியைக் கற்கும் வாய்ப்பை இழந்துவிடுவோம். (நான் இப்படிதான் ஹைதராபாதில் 2.5 ஆண்டுகள் வசித்தும் தெலுங்கு கற்றுக்கொள்ளாமல் நாட்களை வீணடித்தேன்.) கல்லூரியில் ஆங்கிலத் தடுமாற்றம் கொண்ட மாணவர்கள் தங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு நாள்தோறும் அரை மணி நேரம் அரட்டையடிக்கலாம், கிரிக்கெட், சினிமா, அரசியல், ஜொள்ளு என எதையும் பேசலாம், ஆனால், ஆங்கிலத்தில்மட்டும்தான் பேசவேண்டும், இதில் ஒருவருடைய பிழையை இன்னொருவர் (கேலி செய்யாமல்) திருத்தலாம், அதிலிருந்து எல்லாரும் கற்றுக்கொள்ளலாம்
- ஒருவேளை, நேர்காணலில் தோற்றுவிட்டால், அதுவும் ஓர் அனுபவம்தான். ‘நான் என்ன தவறு செய்தேன்?’ என்று Feedback கேட்கலாம், பெரும்பாலும் சொல்வார்கள், அதை அடுத்தமுறை தவிர்க்கலாம், வேறு புதிய பிழை செய்து மறுபடி கற்கலாம், இப்படி வரிசையாகத் தோல்விகள் வந்தாலும், ஒரு கட்டத்தில் தொடர்ந்த கற்றல் நம்மை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும். அந்தத் திருப்புமுனை வருவதற்குள் நம்பிக்கை இழந்துவிடாமலிருப்பது முக்கியம்
1 Comment