எனக்குப் பாட்டுக் கேட்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சும்மா இருக்கும்போதோ நடக்கிறபோதோதான் கேட்பேன், அலுவலக வேலை செய்கிறபோதோ எழுதுகிறபோதோ கேட்கமாட்டேன். இசையும் சரி, பாடல் வரிகளும் சரி, சிந்தனையில் குறுக்கிட்டு எழுத்தைத் தடுமாறச்செய்துவிடும் என்பது என்னுடைய அனுபவம்.
இதற்கு மாறாக, ‘பாட்டுக்கேட்டால்தான் எனக்கு வேலையே ஓடும்’ என்று சொல்கிறவர்களும் உண்டு. இந்த வகை வேலைக்கு இந்தப் பாடல்களையெல்லாம் கேட்கவேண்டும் என்று பக்காவாகப் ப்ளேலிஸ்ட்களைத் தயாரித்து வைத்திருப்பவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.
ஒருமுறை, என்னுடைய நண்பர் ஒருவரிடம் ஏதோ அரட்டையடித்துக்கொண்டிருந்தபோது, ‘தலை வலிக்குது, ஒரு காஃபி குடிக்கலாமா?’ என்று கேட்டேன்.
‘காஃபியெல்லாம் வேணாம், நான் உங்களுக்கு ஒரு சூப்பர் மருந்து தர்றேன், இருங்க’ என்று தன்னுடைய சட்டைப்பையிலிருந்து ஃபோனை எடுத்தார் அவர். அதிலிருந்த ஒரு ப்ளேலிஸ்டைத் திறந்தார். ‘இந்த நாலு பாட்டையும் கேளுங்க, உங்க தலைவலி இருந்த இடம் தெரியாம ஓடிடும்’ என்று என்னிடம் ஹெட்ஃபோனை நீட்டினார்.
நான் அவரை நம்பமுடியாமல் பார்த்தேன், ‘இந்தப் பாட்டுல அப்படியென்ன ஸ்பெஷல்?’
‘இந்த நாலும் __ ராகத்துல அமைஞ்ச பாடல்கள்’ என்றார் அவர். ‘அந்த ராகத்துக்குத் தலைவலியைப் போக்கற குணம் உண்டு!’
அவர் சொன்ன ராகத்தின் பெயர் மறந்துவிட்டது; அந்த நண்பர் யார் என்பதுகூட மறந்துவிட்டது; அந்த நான்கு பாடல்களில் ஒரு பாடல்கூட இப்போது நினைவில்லை; ஆனால், தலைவலிக்குப் பாட்டு வைத்தியம் என்கிற அவருடைய நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. பல நாட்கள் என்னுடைய கணினியில் அந்தப் பாடல்களை வைத்திருந்தேன், தலைவலி வரும்போதெல்லாம் எடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அது சரி, அந்தப் பாடல்களைக் கேட்டதால் ஏதேனும் பலன் இருந்ததா? தலைவலி குணமானதா?
நிச்சயம் பலன் இருந்தது. ஆனால், அந்தப் பலன் அந்தக் குறிப்பிட்ட ராகத்தில் அமைந்த பாடல்களால் கிடைத்ததா, அல்லது, மற்ற வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு 20 நிமிடம் பாட்டுக் கேட்டு ஓய்வெடுத்ததால் கிடைத்ததா என்று யாருக்குத் தெரியும்?