இன்று காலை, யாரோ ஒருவர் ட்விட்டரில் 20 பேரைப் பிடித்துப்போட்டு இப்படி ஒரு செய்தியை அனுப்பினார்:
நண்பர்களே, இது என்னுடைய யூட்யூப் சானல். இதைச் சப்ஸ்க்ரைப் செய்து ஆதரியுங்கள்.
வாரத்துக்கு நான்கைந்து பேராவது இப்படிப் பொது நோட்டீஸ் அனுப்புவது வழக்கம்தான் என்பதால் புன்னகையுடன் நகர்ந்து வந்துவிட்டேன். இன்று மாலையில் சென்று பார்த்தால், அந்த இருபதில் ஒருவர் அதற்கு இப்படிப் பதிலெழுதியிருக்கிறார்:
மகிழ்ச்சி நண்பரே, கீழே உள்ளது என்னுடைய யூட்யூப் சானல். இதை நீங்கள் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்.
இது மிகவும் நல்ல யோசனையாக இருக்கிறது. அடுத்தமுறை யாராவது கிரெடிட் கார்ட் வேண்டுமா என்று ஃபோன் செய்தால், ‘நானே பேங்க் ஏஜென்ட்தான், உங்களுக்குக் கிரெடிட் கார்ட் வேண்டுமா?’ என்று கேட்டுவிடப்போகிறேன்.