ட்விட்டரில் @paulitwitz அவர்கள் மக்களுடைய ‘முதல்’ விஷயங்களைப்பற்றிச் சில சுவையான கேள்விகளைக் கேட்டிருந்தார். அவற்றுக்கு எழுதிய பதில்களை இங்கு தொகுத்துவைக்கிறேன்.
- உங்களுடைய முதல் பள்ளி?
சேலம் மாவட்டம் ஆத்தூரில் எங்கள் வீட்டருகில் இருந்த ‘நகராட்சித் தொடக்கப் பள்ளி’. இப்போது கூகுள் மேப்ஸில் தேடிப் பார்த்தேன். அது ‘நகராட்சி நடுநிலைப் பள்ளி’ ஆகிவிட்டது.
- முதல் நட்பு யார் இப்பொழுதும் தொடர்பில் இருக்கறீர்களா?
பள்ளி நண்பன் கார்த்திகேயன். எப்போதாவது பேசுகிறோம்.
- முதல் பரிசு?
பள்ளியில் படிக்கும்போது (ஐந்தாம் வகுப்பு என்று நினைவு) பேச்சுப் போட்டியில் ஆறுதல் பரிசு. (அது உண்மையில் பேராறுதல் பரிசுதான். ஏனெனில் போட்டியின்போது நான் மேடையேறியும் ஒரு சொல்கூடப் பேசவில்லை. அச்சம்.)
- முதல் தண்டனை? (வீட்டிலோ பள்ளியிலோ)
அப்பா காவல்துறை அலுவலர். பல திட்டுகள், அடிகள், தண்டனைகள். எது முதல் என்று நினைவில்லை.
- முதல் சுற்றுலா? (பள்ளியிலோ நண்பர்களுடனோ)
பள்ளியில் ஏதுமில்லை. கல்லூரியில், ஊட்டி.
- முதல் வேலை/தொழில்?
Associate Software Engineer, BaaN Info Systems, Hyderabad. 1998 July 6.
- சின்னதோ பெரியதோ, உங்களை பொறுத்தவரை உங்களுடைய முதல் சாதனை?
ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம்கூடப் பிழையின்றி பேசத் தெரியாமல் Campus Interviewவில் வேலை வாங்கியது.
- முதல் தோல்வியாக நீங்கள் நினைப்பது?
மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வில் தோற்றது.
இல்லை, அதற்குமுன் எட்டாம் வகுப்பில் முதன்முறையாக 2வது ரேங்க் வாங்கினேன். உண்மையில் அதுதான் இன்னும் வலிக்கிறது. ஏனெனில், மருத்துவப் படிப்புக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று பின்னர் புரிந்துகொண்டுவிட்டேன்.
- நீங்கள் வாங்கிய முதல் பெரிய பொருள்?
இரு சக்கர வண்டி (TVS Max 100R) (உண்மையில் அது அலுவலகத்தின் பரிசு. 3 ஆண்டுகளுக்குள் அங்கிருந்து வேறு இடத்துக்கு வேலை மாறியதால் முழுப் பணம் கொடுத்து நானே அந்தப் பைக்கை வாங்கிக்கொண்டேன்.)
- முதல் வெளிநாட்டுப்பயணம்? சுற்றுலாவா? பணி நிமித்தமாகவா?
மலேசியா. ஆண்டு நினைவில்லை. அலுவல் பணி.