நான் முதன்முதலாக வேலைக்குச் சென்றபோது (அல்லது, கல்லூரிக்குச் சென்றபோது) என் தந்தை எனக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசளித்தார்.
கைக்கடிகாரங்கள் ஒரு தேவையற்ற தொந்தரவு என்பது என் கருத்து. செல்ஃபோனெல்லாம் வருவதற்கு முன்பும் நான் அப்படிதான் நினைத்தேன். ‘நேரம் பார்க்கவேண்டுமென்றால் பக்கத்திலுள்ள சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கலாம், அல்லது, எதிரில் வரும் யாரிடமாவது கேட்கலாம், எதற்கு வீணாக நம் கையில் ஓர் உலோகச் சுமை?’ என்பதுதான் என் கட்சி.
ஆனால், என் தந்தைக்குக் கைக்கடிகாரத்தின்மீது மிகுந்த ஆர்வமும் மதிப்பும் உண்டு. அவர் வாங்கித்தந்தார் என்பதால் நான் அதைக் கட்டிக்கொண்டேன்.
அதன்பிறகு, சில ஆண்டுகளில் பழைய (உலோகச் சுமை) எண்ணம் மேலெழுந்தது. கடிகாரத்தைக் கழற்றி ஷோகேஸில் வைத்துவிட்டேன்.
என் தந்தைக்கு இதில் மிக வருத்தம். அவர் ஒரு விருதுபோல் எண்ணி வாங்கித் தந்த கடிகாரத்தை நான் அப்படி ஒதுக்கியிருக்கக்கூடாது, அவர் பெங்களூர் வரும் நாட்களிலாவது சும்மா கட்டிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கலாம். நான் அதைச் செய்யவில்லை. அதனால், அவர் அந்தக் கடிகாரத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டார், தானே கட்டிக்கொண்டார்.
சமீபத்தில் நடைக்கணக்கு (Daily Walking Steps) சொல்லும் ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றை வாங்கிப் பல மாதங்கள் அணிந்திருந்தேன். அவையும் பிளாஸ்டிக் சுமைகள்தான் என்று தோன்றியது, விட்டுவிட்டேன்.
கடிகாரங்கள், நகைகள், ஆடைகள், காலணிகள் போன்றவற்றை அவற்றின் முதன்மைப் பயன் தாண்டி விரும்புவதற்கும் வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு கலை மனம் வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு அது இன்றுவரை வாய்க்கவில்லை.