எண்பதுகளில் எரிக் யுவான் என்கிற சீன இளைஞர் ஷெர்ரி என்கிற பெண்ணைக் காதலித்தார். எந்நேரமும் ஷெர்ரியைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று அவருடைய மனம் சொன்னது. ஆனால், எதார்த்தம் அதற்குக் குறுக்கில் நின்றது.
ஏனெனில், யுவானுடைய கல்லூரி ஷெர்ரி வசித்த ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது. அங்கிருந்து அவர் ஷெர்ரியைப் பார்ப்பதற்கு வரவேண்டுமென்றால், பத்து மணிநேரம் ரயிலில் பயணம் செய்யவேண்டும். அதனால், அவர்கள் எப்போதாவதுதான் சந்திக்க இயன்றது.
ஷெர்ரியைப்போல் எரிக் தொழில்நுட்பத்தையும் காதலித்தார். அதனால், அவரால் படிப்பையும் விடமுடியவில்லை, காதலியை அடிக்கடி பார்க்காமலும் இருக்கமுடியவில்லை. அந்தப் பத்து மணிநேர ரயில் பயணம் அவருக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது.
சில நாட்களுக்குப்பிறகு, எரிக் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கினார். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்தார், அதற்கான வழிகளைக் கற்பனை செய்யலானார். அப்போது அவர் எழுதிய ஒரு வரி காதல் கவிதையைப்போலவும் தொழில்நுட்ப முன்வைப்பைப்போலவும் இருக்கிறது:
‘என்றைக்காவது என்னிடம் ஓர் அறிவார்ந்த கருவி இருக்கும். அதை நான் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். மறுகணம் நான் உன்னைப் பார்ப்பேன், உன்னுடன் பேசுவேன். அதுதான் என் கனவு.’
அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் எரிக் இதைத்தான் சிந்தித்துக்கொண்டிருந்தார். அதற்கான தொழில்நுட்பம் அன்றைக்கு இல்லை. ஆனால், அதை உருவாக்கும் யோசனை அவருக்குள் வந்துவிட்டது.
சில ஆண்டுகளுக்குப்பிறகு, எரிக்கும் ஷெர்ரியும் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனாலும் அந்தப் பழைய கனவை எரிக் மறக்கவில்லை, பல தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களை முன்னின்று உருவாக்கினார். அவருடைய இளவயதுக் கற்பனையை உலகெங்கும் சாத்தியமாக்கிய Zoom நிறுவனத்தின் நிறுவனர், இப்போதைய தலைவர் அவர்தான்.