பொழிக!

இன்று மாலை திடீர் மழை. அருகிலிருந்த கட்டடமொன்றின் முன்பகுதியில் ஒதுங்கினேன்.

அடுத்த சில நிமிடங்களில் மழை நன்றாக வலுத்துவிட்டது. சாலையில் நடந்துகொண்டிருந்தவர்களும் இரண்டு சக்கர வண்டியோட்டிகளும் பரபரவென்று இந்தக் கூரையை நோக்கி ஓடிவந்தார்கள். அடுத்த ஓரிரு நிமிடங்களுக்குள் அங்கு நூற்றைம்பது பேருக்குமேல் சேர்ந்துவிட்டார்கள்.

அந்தச் சிறு வணிக வளாகத்தில் நான்கைந்து கடைகள் இருந்தன. மெக்டொனால்ட்ஸ் ஒன்று, சான்ட்விச், வாஃபிள், மில்க் ஷேக், ஐஸ் கிரீம் விற்கும் கடைகள் இரண்டு, குமிழ்த் தேநீர்க் கடை ஒன்று, இவற்றுக்கெல்லாம் ஈடுகட்டுவதுபோல் சற்று உள்ளடங்கினாற்போல் ஓர் உடற்பயிற்சிக்கூடம்.

ஆனால், மழைக்கு ஒதுங்கிய யாரும் இந்தக் கடைகளுக்குள் நுழையவில்லை. எப்போது மழை நிற்கும், எப்போது திரும்ப நடக்கவோ ஓட்டவோ தொடங்கலாம் என்றுதான் எங்கள் சிந்தனை இருந்தது. எல்லார் முகத்திலும் சிறு பதற்றம், கவலை, அழுத்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை, நூற்றுக்கணக்கான திட்டங்கள், இந்த நீர்ப் பொழிவு அத்தனை ஓட்டங்களிலும் நுழைந்து, Pause பொத்தானை அழுத்தி அனைத்தையும் இடைநிறுத்திவிட்டது.

அவ்வப்போது, ஸ்விக்கி, ஜொமேட்டோக்காரர்கள் மழைக்கோட்டுடன் எங்களைக் கடந்து இந்தக் கடைகளுக்குள் சென்றார்கள், உணவுப் பொட்டலங்களுடன் வெளியில் வந்து மழையில் வண்டியோட்டத் தொடங்கினார்கள்.

என்னருகில் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். அந்தக் குழந்தை சுற்றியிருந்த அனைவரையும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தது. குழந்தைக்குக் குளிரும் என்று அதன் தாய் ஒரு சால்வையைப் போர்த்திவிட, அது சிலிர்த்துக்கொண்டு சால்வையைக் கீழே தள்ளிவிட்டு முன்னூற்றறுபது பாகையிலும் மக்களைக் கண்காணிக்கலானது.

உடற்பயிற்சிக்கூடத்திலிருந்து களைப்போடு சிலர் வந்தார்கள். கடும் உழைப்புக்குப்பின் வீட்டுக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். மழையைக் கண்டதும் எரிச்சல். உள்ளே திரும்பிச் செல்லவும் மனமில்லை. உட்கார இருக்கையும் இல்லை. மழையைப் பார்வையால் நிறுத்தப்போகிறவர்களைப்போல் உற்றுப்பார்த்தபடி பெருமூச்சு விட்டார்கள்.

மழைக் காலத்தில் எப்போதும் கையில் குடை இருக்கவேண்டும் என்பது நற்பழக்கம். ஆனால், கிளம்புமுன் வானத்தைப் பார்த்துவிட்டு, ‘ம்ஹூம், இன்னிக்கு மழை வராது’ என்று தீர்மானித்துக்கொண்டு கை வீசி நடப்பதுதான் பிடித்திருக்கிறது. அதற்கு நம் வானியல் அறிவைவிடச் சோம்பல்தான் காரணமாக இருக்கிறது. அச்சோம்பலுக்குத் தண்டனை, இப்படிப் பராக்குப் பார்த்தபடி மழையில் நிற்பது.

ம்ஹூம், மென்மையான சாரலையும் நவம்பர் மாதப் பெங்களூருக் குளிரையும் அனுபவித்தபடி நிற்பது எப்படித் தண்டனையாகும்? மற்ற வேலைகள் கிடக்கட்டும், பொழிக மழை!

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *