அனில் கும்ப்ளே இந்திய அணியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது அவர் கல்லூரி மாணவர். அதனால், வெளிநாட்டுத் தொடர்களின்போது அவரால் பல நாள் வகுப்புகளுக்குச் செல்ல இயலாது.
அப்போது, அவருடைய துறைத் தலைவர் அவரை அழைத்து, ‘ஏன் ரொம்ப நாளா வகுப்புக்கு வரலை?’ என்று விசாரித்திருக்கிறார். ‘விளையாடப் போயிருந்தேன் சார்’ என்று கும்ப்ளே பதில் சொல்லியிருக்கிறார்.
அந்தத் துறைத் தலைவருக்குக் கிரிக்கெட் பார்க்கிற வழக்கமில்லைபோல. தன்னுடைய மாணவர் இந்திய அணிக்காக விளையாடச் சென்றிருந்தார் என்பதை அறியாமல் அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியிருக்கிறார், கல்லூரி முதல்வரிடம் சென்று விளக்கம் சொல்லும்படி அனுப்பிவைத்திருக்கிறார். நல்லவேளையாக, சில நண்பர்கள் தலையிட்டு கும்ப்ளே-க்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் வியப்பான விஷயம், லட்சக்கணக்கான பேர் கிரிக்கெட் விளையாடும் நாட்டில் மிகச் சிறந்த 11 பேரில் ஒருவராகத் தேர்வாகி வெளிநாடு சென்று விளையாடிய கும்ப்ளே-க்கு அதையெல்லாம் பெருமையுடன் சொல்லிப் பந்தா அடித்துக்கொள்ளத் தோன்றவில்லை, ‘விளையாடப் போனேன்’ என்றுமட்டும்தான் சொல்லியிருக்கிறார். கேட்பதற்கு நமக்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும், அனைத்துக்கும் அதுதானே அடிப்படை!
சென்ற வாரம் ஒரு நாளிதழில் என்னைப் பேட்டியெடுத்தபோது, ‘புதிதாக எழுதவருகிறவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்டார்கள், ‘எழுத்தின்மூலம் உங்களுக்குப் பணம், புகழ், பதவி என்று ஆயிரம் நன்மைகள் கிடைக்கலாம், அவற்றில் ஒன்றாக, எழுதுகிறோம் என்ற மன நிறைவு கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும். அது இல்லாவிட்டால் மீதமுள்ள 999 நன்மைகளால் எந்தப் பயனும் இல்லை. அது இருந்துவிட்டால் மற்ற 999ஐயும் நீங்கள் பொருட்படுத்தக்கூட மாட்டீர்கள்’ என்று சொன்னேன்.
கும்ப்ளே-க்கு அந்த ஒன்று கிடைத்திருக்கிறது, அதனால்தான் மற்ற 999ஐ அவர் தன்னுடைய துறைத் தலைவரிடம் சொல்லிக்காண்பிக்கவில்லை.
பின்குறிப்பு: இந்த நிகழ்ச்சியைச் சித்தார்த் வைத்தியநாதன் அவர்கள் எழுதிய இந்தப் பிரமாதமான கட்டுரையில் படித்தேன்.
***
தொடர்புடைய புத்தகம்: ஆடுகளம் : விளையாட்டுக்களம் சொல்லித்தரும் வாழ்க்கைப் பாடங்கள் (என். சொக்கன்)