1956ம் ஆண்டு, புகழ் பெற்ற கர்நாடக இசைக்கலைஞரான பிடாரம் கிருஷ்ணப்பாவுடைய வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார் எழுத்தாளர் எல்லார்வி.
இதற்காக, பிடாரம் கிருஷ்ணப்பாவின் புகழ் பெற்ற சீடரான வயலின் மேதை சௌடையாவைச் சந்தித்தார் எல்லார்வி, ‘உங்கள் குருநாதரைப்பற்றி விரிவாகச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார், அவர் சொல்லும் தகவல்களைக் கவனமாகக் குறித்துக்கொண்டார்.
எழுத்தாளர் புத்தி சும்மா இருக்குமா? ‘இத்தனைப் பெரிய இசை மேதையின்முன் அமர்ந்திருக்கிறோம், இவருடைய வாழ்க்கையையும் கேட்டுக் குறித்துக்கொண்டால் என்ன?’ என்று யோசித்தார் எல்லார்வி. ‘அப்படியே உங்களுடைய வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று சௌடையாவிடம் கேட்டார்.
ஆனால், சௌடையா அதை உறுதியாக மறுத்துவிட்டார், ‘தலை இருக்க வால் ஆடுவது முறையில்லை, முதலில் என் குருநாதரைப்பற்றி எழுதுங்கள்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.