இளைஞர் காந்தி இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றபோது அங்கு மது, இறைச்சி, பெண்களைத் தொடுவதில்லை என்று தன்னுடைய தாய்க்கு வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் ஒழுங்காகப் பின்பற்றுகிறாரா, இல்லையா என்பதை அவருடைய குடும்பத்தினர் எப்படி உறுதிப்படுத்தியிருப்பார்கள்?
அந்தக் காலத்தில் CCTV கேமராவெல்லாம் கிடையாது என்பதால், காந்தி குடும்பத்தினர் அதற்கு வேறோர் ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். இங்கிலாந்தில் காந்தி சந்திக்கிற பெரிய மனிதர்களிடமெல்லாம் ‘இவர் மது அருந்துவதில்லை, இறைச்சி உண்பதில்லை, பெண்களை நிமிர்ந்து பார்ப்பதுகூட இல்லை’ என்று அத்தாட்சிப் பத்திரங்களை வாங்கிவரச் சொன்னார்கள். அந்தக் கடிதங்கள்தான் அவருடைய ஒழுக்கத்துக்குச் சான்று.
தன்னுடைய உறுதிமொழியைப்போல் இந்த ஏற்பாட்டையும் காந்தி மிகத் தீவிரமாகப் பின்பற்றினார். இங்கிலாந்து செல்லும் கப்பலிலேயே ஒருவரிடம் இப்படிப்பட்ட அத்தாட்சிப் பத்திரத்தை எழுதி வாங்கியிருக்கிறார் அவர், அதைச் சில நாட்கள் பெருமையுடன் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்.
அதன்பிறகு?
இன்றைக்கு LinkedInல் எழுதப்படும் பாராட்டுப் பரிந்துரைகளைப்போல, இந்த அத்தாட்சிப் பத்திரங்கள் எப்போதும் உண்மையாக இருக்கவேண்டிய தேவை இல்லை என்று காந்திக்குப் புரிந்துவிட்டது. அதாவது, மது அருந்துகிற ஒருவர்கூட ‘இவர் மது அருந்துவதில்லை’ என்று பொய்யாகச் சான்றிதழ் பெற்றுவிடலாம் என்பதை உணர்ந்தபிறகு, இப்படிச் சான்றிதழ் வாங்கித் தன்னுடைய ஒழுக்கத்தை நிரூபிப்பது வீண் என்று அவர் புரிந்துகொண்டார். ‘நான் கொடுத்த உறுதிமொழியைப் பின்பற்றினேன், அதன்படி ஒழுக்கமாகத்தான் இருந்தேன் என்று நான் சொல்லும் சொற்களை என் குடும்பத்தினர் நம்பாவிட்டால், இதுபோன்ற அத்தாட்சிப் பத்திரங்களால் என்ன பயன்?’
***
தொடர்புடைய புத்தகங்கள்:
- காந்தி யார்?: அண்ணல் காந்தியைப்பற்றிய எளிமையான, தெளிவான அறிமுகம்
- காந்தி வழி: மகாத்மா காந்தியின் 14 முதன்மைக் கொள்கைகளை விளக்கும் எளிமையான, தெளிவான கையேடு