வானொலியில் குழந்தை வளர்ப்புபற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டது:
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில்தான் போடவேண்டும் என்று உங்கள் குழந்தைக்குச் சொல்லிக்கொடுங்கள். வேறு யாராவது குப்பையைக் கீழே வீசி எறிந்தால் அதை எடுத்துப் பக்கத்திலுள்ள குப்பைத் தொட்டியில் போடவும் கற்றுக்கொடுங்கள். அதில் ஏதும் இழிவு இல்லை. உங்கள் குழந்தை சிறுவயதில் இவற்றைக் கற்றுக்கொண்டால் அதன்பிறகு வாழ்நாள்முழுக்க அனிச்சை செயலைப்போல் இதைச் செய்வார்.
இதில் அந்த வல்லுனர் சொல்லாத சில முக்கியமான வரிகளை நான் சேர்க்கிறேன்:
இதை அவர் அனிச்சை செயலைப்போல் செய்வார். அதில் ஐயமில்லை. ஆனால், அவர் அப்படிச் செய்யும்போது சுற்றியிருக்கிறவர்களில் பெரும்பாலானோர் அவரைப் பார்த்துச் சிரிப்பார்கள். ‘இது ஒரு பெரிய விஷயமா?’ என்பார்கள், ‘நீ ரொம்ப ஓவராப் படம் போடறே’ என்பார்கள்.
அவ்வளவு ஏன்? அவர் எடுத்துப் போட்ட அந்தக் குப்பையைக் கீழே வீசியவரும் அவர்களோடு சேர்ந்து சிரிப்பார். அவர் மனம் திருந்தி அடுத்தமுறை குப்பைத் தொட்டியைப் பயன்படுத்துவார் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். அதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். அடுத்தமுறையும் அவர் குப்பையைக் கீழேதான் போடுவார். அதற்கு எரிச்சலடையக்கூடாது. மறுபடி அந்தக் குப்பையை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடும் மனம் இருக்கவேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் அவர் என்றைக்காவது திருந்தக்கூடும்.
ஒருவேளை, அவர் எப்போதும் திருந்தாவிட்டால்?
அதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நம்மால் இயன்ற தூய்மையைத்தான் நாம் செய்ய இயலும்.
இங்கு “குப்பையைக் குப்பைத்தொட்டியில் போடுதல்” என்பது ஓர் எடுத்துக்காட்டுதான். நாம் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிற எல்லா நல்ல, மேன்மையான பழக்கங்களுக்கும் இது பொருந்தும். ‘இந்த நல்ல பழக்கங்களைப் பின்பற்றாதோர் பலர் உன்னைச் சுற்றி இருப்பார்கள், அதுதான் உலக இயல்பு, அதைக் கண்டு மனம் தளரவேண்டாம்’ என்பதையும் சேர்த்துக் கற்றுத்தாருங்கள். இல்லாவிட்டால் அவர்கள் நல்லதையும் செய்துவிட்டுச் சோர்வோடும் இருப்பார்கள், அது சரியில்லை, நியாயமும் இல்லை.