இன்று இணையத்தில் எதையோ படித்துக்கொண்டிருந்தபோது “Honorary White”, அதாவது, “கௌரவ வெள்ளையர்” என்ற சொல்லைப் பார்த்தேன். அந்தச் சொற்சேர்க்கையைப் பார்த்தவுடன் திகைப்பும் சிறு எரிச்சலும் வந்தது. தொடர்ந்து அதைப்பற்றித் தேடிப் படித்தபோது, திகைப்பு குறைந்து எரிச்சல் மிகுந்தது.
அந்தக் காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி கடுமையாக இருந்தபோது, கருப்பினத்து மக்கள் மிகவும் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அடிப்படை உரிமைகள்கூடத் தரப்படவில்லை. ஆனானப்பட்ட காந்தியைக்கூட அவர்கள் ரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறிந்ததாகப் படித்திருக்கிறோம்.
ஆனால், வெள்ளையர் அல்லாத சிலருக்குமட்டும் அவர்கள் “கௌரவ வெள்ளையர்” பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதாவது, கருப்பினத்தவர்களுக்கு ஒரு படி மேல், வெள்ளையர்களுக்கு ஒரு படி கீழ். மற்ற கருப்பினத்தவர்களுடன் ஒப்பிடும்போது இவர்களுக்குச் சில கூடுதல் உரிமைகள் உண்டு, ஆனாலும், வெள்ளையர்களுக்கு அடங்கி ஒடுங்கித்தான் இருக்கவேண்டும்.
‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்று ஜி. நாகராஜன் எழுதியது வரலாறு முழுமைக்கும் பொருந்தும்போல!