கற்றல் சுகம் (12)

சில ஆண்டுகளுக்குமுன்னால், என்னுடைய சக ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபடி எம்.பி.ஏ. படித்தார். மிகப் பெரிய கல்லூரி, மிகச் சிறந்த பாடங்கள், நண்பரும் திறமையானவர்தான், நன்றாகப் படித்து, மிக நல்ல மதிப்பெண்களை வாங்கித் தேர்ச்சி பெற்றார், தொழிலதிபர் முகேஷ் அம்பானி கரங்களால் தன்னுடைய பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு, எங்களுக்கு அவர் எழுதிய மின்னஞ்சல் ஒன்றில், ’இந்தப் பயணம் அத்தனை எளிதானதாக இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார், ‘ஒருபக்கம் வேலைப் பளு, இன்னொருபக்கம் குடும்பப் பொறுப்புகள், வளர்ந்துவரும் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டும், மற்ற சமூகக் கடமைகள், இத்தனைக்கும் நடுவில் இந்த வயதில் வகுப்புகளுக்குச் சென்று உட்கார்ந்து, பாடங்களைப் படித்து, ஹோம்வொர்க் செய்து, தேர்வு எழுதி… பெரிய கஷ்டம்தான்!’

இவ்வளவு சிரமங்கள் இருப்பினும், படிப்பின்மீது இருக்கிற ஆர்வம் அவரைத் தொடர்ந்து செலுத்தியிருக்கிறது. வெற்றிகரமாகப் படித்து முடித்துப் பட்டம் பெற்றுவிட்டார்.

இன்னொருபக்கம், கல்லூரியிலிருந்து வெளியே வந்தவுடன் ‘படிப்பு’க்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறவர்களும் ஏராளம். ‘இத்தனை நாள் பட்ட பாடு போதும்யா, இனிமே வேலை, சம்பளம்ன்னு செட்டிலாகிடப்போறேன், ஒரு புத்தகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கப்போறதில்லை!’

இந்த இரண்டுக்கும் நடுவே உள்ளவர்களுக்கு வேறுவிதமான சிரமங்கள், இனிமேல் எதையும் கற்றுக்கொள்ளவேண்டாம் என்றும் இவர்களால் நினைக்கமுடிவதில்லை, என்னுடைய நண்பரைப்போல் முறைப்படி ஒரு கல்லூரிக்குச் சென்று பகுதி நேரமாக ஏதேனும் படிக்கலாம் என்றால், நேரம் போதவில்லை, அல்லது, ஒத்துவரவில்லை, அல்லது, வசதியில்லை.

என் நண்பருடைய எம்.பி.ஏ. மின்னஞ்சல் வந்த அதே நேரத்தில் நான் என்னுடைய அலுவல் சார்ந்த கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன், அதன் நடுவில் ’இதுபற்றி மேலும் அறிய, நான் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் சேருங்கள்’ என்று அந்த ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைக்கு ஆன்லைன் வகுப்புகள் மிகவும் புகழ் பெற்றுவிட்டன. ஆனால் அன்றைக்கு அப்படி ஒரு சொல்லையே நான் கேள்விப்பட்டதில்லை. அதுபற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆவலில் அந்த இணைப்பை க்ளிக் செய்தேன், அது நேராக கோர்ஸெரா என்ற இணைய தளத்திற்குச் சென்றது.

ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால், ‘கோர்ஸெரா’ என்பது, இணையத்தைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் இலவசமாகப் படிப்பதற்கு வழி செய்யும் ஒரு தளம். கலை, அறிவியல், சமூகம், சட்டம், கணிதம், மருத்துவம், கம்ப்யூட்டர், சினிமா, இசை, மேனேஜ்மென்ட் என்று அனைத்துத் தலைப்புகளிலும் இங்கு பாடங்கள் உள்ளன.

முக்கியமான விஷயம், இவையெல்லாம் யாரோ ஊர், பேர் தெரியாதவர்கள் பதிவு செய்த பாடங்கள் இல்லை, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தொழில்முறை வல்லுனர்கள், எழுத்தாளர்களுடன் கோர்ஸெரா இணைந்து பணியாற்றுகிறது. தங்களுடைய துறையின் மிகச் சிறந்த அம்சங்களைத் தேர்ந்தெடுத்து, பாடங்களை வடிவமைத்து, அவர்களையே அதை நடத்தச் சொல்லி, வீடியோவில் பதிவு செய்து நமக்குத் தருகிறார்கள்.

ஆக, நாம் வீட்டிலோ அலுவலகத்திலோ இருந்தபடி, நமக்கு வசதியான நேரத்தில் இந்த வல்லுனர்கள் சொல்லித்தரும் பாடங்களைக் கேட்கலாம், பார்க்கலாம், சக மாணவர்களுடன் உரையாடலாம், வாத்தியாரிடமே நேரடியாகச் சந்தேகம் கேட்டுத் தெளிவு பெறலாம்.

வெறும் ஏட்டுக் கல்வி போதாதே, அதற்காக அந்தந்தத் துறை சார்ந்த புகழ்பெற்ற ஆளுமைகள், வல்லுனர்கள், தொழில்முனைவோர்களைப் பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள். இதன்மூலம், நாம் ‘தியரி’யில் படித்த விஷயங்கள் எதார்த்தத்தில் எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

இன்னொரு விசேஷம், கோர்ஸெராவின் பாடங்களெல்லாம் பெரும்பாலும் ஆறு வாரம், எட்டு வாரம் என்று குறுகிய காலப் படிப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே, மாதக்கணக்கில் நம்மால் நேரம் ஒதுக்கமுடியுமா என்கிற கவலை இல்லாமல் சட்டென்று படித்து முடித்துவிடலாம், அந்தத் தலைப்பில் (ஓரளவு) வல்லுனராகிவிடலாம். விருப்பமிருந்தால், அதுதொடர்பான மற்ற தலைப்புகள், இன்னும் ஆழமான பாடங்களைத் தேடிச் செல்லலாம்.

இதற்காக, நாம் வாரத்துக்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். அதுவும் காலை, மாலை என்று கட்டாயம் கிடையாது, நள்ளிரவு 12 மணிக்குக்கூட வாத்தியார் வீடியோ பாடம் எடுப்பார்.

எனக்கு அதுவும் சிரமம் என்றால், பாடங்களை, வீடியோக்களை செல்ஃபோனில் இறக்கிக்கொள்ளலாம், அப்புறம் பேருந்தில் போகும்போது, வங்கி வரிசையில் காத்திருக்கும்போதுகூடச் சட்டென்று மாணவர்களாக மாறிவிடலாம்.

அந்தந்த வாரம் படித்த பாடங்களில், சிறு தேர்வுகள் வைக்கிறார்கள். ஹோம்வொர்க் தருகிறார்கள், நாம் எழுதும் வீட்டுப் பாடங்களை நமது சக மாணவர்களே திருத்துவார்கள், அதை இன்னும் சிறப்பாகச் செய்வது எப்படி என்று ஆலோசனைகள் சொல்வார்கள்.

அதன்பிறகு, அந்த வகுப்பு நிறைவடையும் நேரத்தில் ஒரு தேர்வும் வைப்பதுண்டு. அதில் ஒட்டுமொத்தமாக அனைத்துப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.

‘அச்சச்சோ, எனக்குப் பரீட்சையெல்லாம் அலர்ஜி’ என்கிறீர்களா? கவலையே வேண்டாம், உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், பாடங்களைமட்டும் படித்துவிட்டுப் பரீட்சையைக் கண்டுகொள்ளாமல் மறந்துவிடலாம்.

ஒரே பிரச்னை, வாராந்திரத் தேர்வுகள், ஹோம் வொர்க், நிறைவுத் தேர்வு ஆகியவற்றை எழுதி, அவற்றில் போதுமான மதிப்பெண் வாங்குகிறவர்களுக்குமட்டுமே அந்தப் பாடத்துக்கான சான்றிதழ் வழங்கப்படும். அது உங்களுக்குத் தேவையில்லை என்றால், படிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

பல பெரிய, மிகப்பெரிய, சிறிய பல்கலைக்கழகங்களெல்லாம் ‘கோர்ஸெரா’வில் தங்களுடைய பாடங்களை வழங்குகின்றன. நூற்றுக்கணக்கான பாடங்கள் அந்தந்தத் துறையின் மிகச் சிறந்த ஆசிரியர்கள், வல்லுனர்களால் நடத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்திப் பாடங்களை எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்லித்தருகிறார்கள்.

இன்னொரு விஷயம், இந்த வகுப்புகள்முழுவதும் இணையத்திலேயே, அதுவும் இலவசமாக இயக்கப்படுவதால், கோர்ஸெராவின் ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு வாரமும் பல ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். நிஜத்தில் இப்படி ஒரு பெர்ர்ர்ரிய கல்லூரியை யாராலும் கட்டிவிடமுடியாது.

இதனால், முன்பெல்லாம், ’ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், ஒரு புத்தகத்தைப் படி’ என்பார்கள். இப்போது, ‘கோர்ஸெராவில் தேடி ஏதாவது ஒரு கோர்ஸில் சேர்ந்துகொள்’ என்கிறார்கள். அலுவல் சார்ந்த பயோடேட்டாவில் ‘கோர்ஸெராவில் இந்தப் பாடம் படித்து, பரீட்சை எழுதி பாஸ் செய்துள்ளேன்’ என்று குறிப்பிட்டால் அங்கீகாரம் கிடைக்கிறது, அந்த அளவுக்கு இந்தப் பாடங்களுக்கு மதிப்பு ஏற்பட்டுவிட்டது.

இங்கு கோர்ஸெரா என்பது ஓர் எடுத்துக்காட்டுதான். இதேபோல் யூடெமி, கான் அகாதெமி, ஸ்கில்ஷேர், மாஸ்டர்கிளாஸ் என்று இன்னும் பல இணையத்தளங்கள் இணையத்தின் வழியாகக் குறுகியகால, நீண்டகாலப் படிப்புகளை வழங்குகின்றன. இவற்றுடன், வெவ்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், வல்லுனர்களுடைய தனிப்பட்ட இணையத்தளங்கள், யூட்யூப் போன்ற வீடியோத் தளங்களிலும் பல படிப்புகள் கிடைக்கின்றன.

இதற்கெல்லாம் என்ன செலவாகும்?

பல இணைய வகுப்புகள் இலவசம்தான். ஒரு குறிப்பிட்ட கட்டணம் வழங்கிப் படிக்கிற படிப்புகளும் உள்ளன, மாதம் இவ்வளவு தொகை செலுத்திவிட்டால் எந்தப் படிப்பையும் படித்துக்கொள்ளலாம் என்கிற ‘சந்தா’த் திட்டமும் உள்ளது.

‘எனக்குப் பதிவு செய்த வீடியோவெல்லாம் சரிப்படாது, நேரடியாக ஓர் ஆசிரியருடைய பாடங்கள் வேண்டும்’ என்றால், அதற்கும் வழி உண்டு. ‘Live classes’ எனப்படும் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இங்கு ஓர் ஆசிரியர் இணையம் வழியாகப் பல மாணவர்களுக்குப் பாடமெடுப்பார், ஸ்கைப், ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற ஒரு செயலியின் வழியாக அதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

இத்துடன், ‘1:1 coaching’ எனப்படுகிற ஒரே ஆசிரியர், ஒரே மாணவர் என்கிற வகையில் அமைந்த வகுப்புகளும் உண்டு. இங்கு மாணவருடைய கற்றல் தேவையை அறிந்து அதற்கேற்ப ஆசிரியர் பாடங்களை அமைப்பார், அல்லது, குறிப்பிட்ட பிரச்னைகளில் ஆலோசனை சொல்லி வழிகாட்டுவார். ஒப்பீட்டளவில் இதற்குக் கூடுதலாகச் செலவழிக்கவேண்டியிருக்கும், ஆனால், துறைசார்ந்த வல்லுனர் ஒருவருடைய நேரம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும், அதன்மூலம் இன்னும் நன்றாகவும் விரைவாகவும் கற்றுக்கொள்ளலாம்.

இதில் இன்னொரு வாய்ப்பும் உண்டு. நாம் வல்லுனராக உள்ள துறையில் நாமே வகுப்புகளை எடுக்கத் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, நூல் திட்டமிடல், எழுதுதல், டிஜிட்டல் பதிப்பித்தல், பணிவாழ்க்கைத் திட்டமிடல், நேர மேலாண்மை போன்ற தலைப்புகளில் நான் பலருக்குத் தனி வகுப்புகளை நடத்திவருகிறேன். அதுபோல் உங்கள் வல்லமை எதில் உள்ளதோ அதில் நீங்களும் ஆசிரியராகலாம்.

வியப்பான விஷயம், இப்படி ஆன்லைனில் படிக்கிற வசதி அறிமுகமாகிச் சில ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் எண்ணிக்கையிலும் தரத்திலும் இப்படி ஓர் உயரத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்கள், இனிவரும் ஆண்டுகளில் உலக அறிவெல்லாம் டிஜிட்டல் வடிவில் இங்கே வந்து குவிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

அதன்பிறகு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிபுரிகிறவர்கள், இல்லத்தரசிகள் என்று யார் எதைக் கற்றுக்கொள்ள விரும்பினாலும், அவர்களுக்கு வசதியான நேரத்தில் இலவசமாகவோ ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியோ படிக்கலாம், ’அறிவு என்பது எல்லாருக்கும் எளிதில் கிடைக்கவேண்டும்’ என்பதையே கோர்ஸெரா தனது லட்சியமாகக் குறிப்பிடுகிறது.

தனிப்பட்டமுறையில், ஏற்கெனவே ஒரு பணியில் உள்ளவர்கள் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளில் சேர்வதன்மூலம் கிடைக்கும் மிகப் பெரிய லாபம், நேர ஒழுக்கம். ஒரு தலைப்பைக் கற்றுக்கொள்வதற்காக வாரம் இத்தனை மணி நேரம் ஒதுக்கவேண்டும், தேர்வு எழுதவேண்டும், வீட்டுப் பாடங்களைச் செய்யவேண்டும், மற்றவர்களுடைய வீட்டுப் பாடங்களைத் திருத்திக் குறிப்புகள் எழுதவேண்டும், பரீட்சைக்குப் படித்துத் தயார் செய்யவேண்டும்… இப்படி நாம் மறந்தே போய்விட்ட விஷயங்களை இந்தப் பாடங்கள் மீண்டும் நினைவுபடுத்துகின்றன. அந்த நேர்த்தி, நம்முடைய மற்ற பணிகளிலும் பிரதிபலிக்கிறது.

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *