கற்றல் சுகம் (8)

என்னுடைய நண்பர் ஒருவர் சிற்றூரொன்றில் பிறந்து வளர்ந்தவர்; அங்கேயே கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்தபிறகு, வேலைக்காகப் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தவர்.

வேலையில் சேர்ந்து சில நாட்களுக்குப்பிறகு, அவருடைய அலுவலகத்தில் ஏதோ கொண்டாட்டம். அதற்காகக் குழு உறுப்பினர்கள் எல்லாரையும் நட்சத்திர உணவகமொன்றுக்கு அழைத்துச்சென்றார்கள். இவரும் சூப்பில் தொடங்கி ஐஸ் க்ரீம்வரை சுவையான பண்டங்களை வெளுத்துக்கட்டினார்.

அவர் ஐஸ்க்ரீமைச் சாப்பிட்டதும், உணவு பரிமாறுகிற ஒருவர் அவரை நெருங்கினார், ‘மேடம், Finger bowl கொண்டுவரட்டுமா?’

அதைக் கேட்டதும் பதறிப்போன என் நண்பர், ’அச்சச்சோ, வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார், ‘இதுக்குமேல என்னால எதையும் சாப்பிடமுடியாது. ஃபுல் கட்டு கட்டிட்டேன், வயித்துல துளி இடம் இல்லை!’

உணவு பரிமாறுகிறவர் சிரித்தார், ‘மேடம், Finger Bowlன்னா சாப்பிடற பொருள் இல்லை, சாப்பிட்டப்புறம் கை கழுவற கிண்ணம்’ என்று தணிந்த குரலில் விளக்கினார்.

Finger, Bowl ஆகிய இரண்டும் என் நண்பருக்கு நன்கு தெரிந்த சொற்கள்தாம். ஆனால், இந்த இரண்டும் சேரும்போது, ‘விரல்களைக் கழுவுவதற்கான கிண்ணம்’ என்கிற பொருள் வருகிறது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆக, அகரமுதலி என்பது நம்முடைய கற்றலின், புரிந்துகொள்ளலின் தொடக்கமாக இருந்தாலும், எல்லாச் சொற்களும், அவற்றின் எல்லாவிதமான சேர்க்கைகளும் அங்கு இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அவற்றுக்குச் சுருக்கமான பொருள்தான் தரப்பட்டிருக்கும்; அவை போதாமலோ, புரியாமலோ இருந்துவிடலாம். அங்கிருந்து நாம் வேறு சில மூலங்களைத் தேட வேண்டியிருக்கலாம்.

எந்தவொரு புதிய சொல்லைக் கேள்விப்பட்டதும் நான் செய்கிற முதல் வேலை “define:” என்று தட்டச்சு செய்து, அதற்குப் பின்னால் அந்தச் சொல்லைச் சேர்த்துக் கூகுளில் தேடுவேன். உடனே, கூகுள் எனக்கு அதைத் தெளிவாக வரையறுத்துச் சொல்லிவிடும்.

எடுத்துக்காட்டாக, ‘define: finger bowl’ என்றதும் கூகுள் எனக்கு இப்படி விளக்குகிறது: a small bowl containing water for rinsing the fingers during or after a meal.

இதைப் படித்ததும், எனக்கு finger bowlபற்றிய ஒரு காட்சி கிடைத்துவிடுகிறது. அதை முழுமைப்படுத்திக்கொள்வதற்காக, ‘images’ என்ற தெரிவைத் தட்டுகிறேன். கூகுள் அதைத் தெளிவாகப் படம் வரைந்து பாகம் குறித்துவிடுகிறது.

ஒருவேளை, இந்த உரை, பட விளக்கங்கள் எனக்குப் போதாவிட்டால், அந்தச் சொல்லின் பின்னால் ‘wiki’ என்ற சொல்லைச் சேர்த்து (அதாவது, ‘finger bowl wiki’ என்று) அதே கூகுளில் தேடுவேன். உடனே, ‘finger bowl’க்கான விக்கிப்பீடியாப் பக்கத்தைக் கூகுள் காட்டிவிடும்; அந்தப் பக்கத்திலுள்ள முதல் ஓரிரு வரிகளையும் (அதாவது, அந்த விஷயத்துக்கான விளக்கத்தின் தொடக்கப் பகுதியையும்) அங்கேயே காணலாம், படித்துப் புரிந்துகொள்ளலாம்.

இதுவும் எனக்குப் போதாவிட்டால், அந்த விக்கிப்பீடியாப் பக்கத்தைக் க்ளிக் செய்கிறேன். முதல் சில பத்திகளைப் படிக்கிறேன்; ஆர்வம் ஏற்பட்டால் முழுமையாகப் படிக்கிறேன்.

ஒரு விஷயம், விக்கிப்பீடியா என்பது துறை சார்ந்த வல்லுனர்கள் எழுதிய அலுவல்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பு இல்லை; அது தன்னார்வலர்களால் தொகுக்கப்படும் ஒரு தகவல் களஞ்சியம். ஆகவே, அங்குள்ள அனைத்துத் தகவல்களும் சரியானவை என்று கூற இயலாது; அதே நேரம், பெரும்பாலானவை சரியாகவே இருக்கும், அதற்கான சான்றுகளும் அங்கேயே தரப்பட்டிருக்கும்.

இதன் பொருள், நாம் தேடும் தலைப்பு சார்ந்த நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், பேட்டிகள், செய்திகள் போன்றவற்றுக்கான இணைப்புகள் அதன் விக்கிப்பீடியாப் பக்கத்திலிருந்து நமக்குக் கிடைக்கும். ஆழமாகச் செல்ல விரும்புகிறவர்களுக்கு இது மிகவும் வசதி.

ஆனால், பல நேரங்களில் நாம் அவ்வளவு ஆழமாகச் செல்லமாட்டோம். விக்கிப்பீடியாவின் முதல் சில பத்திகளுக்குள்ளேயே நாம் அறிந்துகொள்ள விரும்பும் விஷயத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான பார்வை கிடைத்துவிடும்.

ஒருவேளை, அந்த விக்கிப்பீடியாக் கட்டுரையில் ஒரு தவறான தகவல் இருந்தால்?

விக்கிப்பீடியாக் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். அதே நேரம், அந்த உரிமையை நாம் பொறுப்புடன் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதாவது, ஒரு தகவல் தவறு என்று நமக்கு உறுதியாகத் தெரிந்தாலும், ஓரிரு நம்பகமான சான்றுகளைப் பார்த்து அதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும், அதன்பிறகு, அந்தச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி அதைத் திருத்திச் சரிசெய்யலாம்.

ஒரு சான்று நம்பகமானதா, இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

யாரும் எதையும் எழுதக்கூடிய இன்றைய சூழ்நிலையில் அது சற்று சிரமம்தான். எனினும், இதற்குச் சில அறிவியல்பூர்வமான வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்னர் வேறோர் இடத்தில் பேசுவோம்.

ஒருவேளை, நான் தேடும் தலைப்புக்கு ஒரு விக்கிப்பீடியாப் பக்கம் இல்லாவிட்டால்?

அப்போது, வேறு இடங்களில் அதைத் தேடிப் படிக்கலாம். நேரமிருந்தால், திரும்பி வந்து விக்கிப்பீடியாவில் நாமே அந்தப் பக்கத்தை உருவாக்கலாம்.

அதேபோல், ஒரு விஷயத்தைப்பற்றிய எல்லாத் தகவல்களும் விக்கிப்பீடியாவில் இருக்கும் என்று நிச்சயமில்லை. அங்கு படிக்கிற தகவல்கள் நமக்குப் போதாவிட்டாலும் நாம் வேறு தேடல் உத்திகளைப் பயன்படுத்தவேண்டியிருக்கும்.

இன்னும் சிலருக்கு, விக்கிப்பீடியாவின் மொழி உவப்பாக இருப்பதில்லை, அல்லது, அதன் உண்மைத்தன்மையை அவர்கள் நம்புவதில்லை. இவர்களுக்கும் வேறு தகவல் மூலங்கள் தேவைப்படுகின்றன.

வேறு எந்தவிதத்திலெல்லாம் இணையத்திலும் அதற்கு வெளியிலும் ஒரு விஷயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம்?

(தொடரும்)

இத்தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இங்கு காணலாம்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *