நன்கு கற்றறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் சரியாகப் புரியாவிட்டால் அதைப்பற்றி அரைகுறையாக எதையும் உளறிக்கொட்டமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர் (திருக்குறள் 417).
சற்றுத் தள்ளி (419வது திருக்குறளில்) இதற்கு நேர் எதிரான ஒரு கும்பலைப்பற்றியும் சொல்கிறார்: நன்கு கற்றறியாதவர்களுடைய வாய் மூடிக் கிடக்காது, அவர்கள் எப்போதும் எதையாவது உளறிக்கொண்டுதான் இருப்பார்கள்.
இதில் பல அடுக்குகளாக எத்தனை நல்ல பாடங்கள் என்று பாருங்கள்:
1. நன்கு கற்றவர்களுக்குக்கூட எல்லாம் புரிந்துவிடாது. அவர்களுக்கும் புரியாத விஷயங்கள் இருக்கும்.
2. ஆனால், அது தங்களுக்குப் புரியவில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ‘எனக்குப் புரியாதது உண்டா?’ என்று எண்ணமாட்டார்கள், அதற்குத் தேவையான உழைப்பைக் கொடுப்பார்கள். அதாவது, அதை அறிந்தவர்களிடம் பேசுவார்கள், கேள்வி கேட்பார்கள், புரிந்துகொள்வார்கள். அதில் எந்த இழிவும் இல்லை.
3. இதற்குப்பிறகும் ஒரு விஷயம் நமக்குப் புரியாவிட்டால், அல்லது, புரிந்துகொள்ள நேரமோ முனைப்போ ஆர்வமோ இல்லாவிட்டால், சும்மா இருந்துவிடவேண்டும். நமக்குப் புரியாத விஷயத்தைப்பற்றி நாமாக ஊகித்து எதையோ பேசுவதைவிட வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்துவிடுவது மேல்.
4. புரியாத விஷயங்களைப்பற்றி உளற ஆரம்பித்தால் நம் வாய் மூடாது. ஏனெனில், நாம் முட்டாள்தனமாகப் பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாது, அதனால் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்போம், பிறருடைய பார்வையில் நம் மதிப்பு குறைந்துகொண்டுதான் இருக்கும். அதனால், தொடக்கத்திலேயே ‘எனக்கு நன்கு தெரிந்ததைமட்டும்தான் பேசுவேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்வது நல்லது. அப்போது அளவாகப் பேசுவோம், சரியாகவும் பேசுவோம்.