குழந்தைகளிடம் கணக்கு ஆர்வத்தை உண்டாக்கப் பெரிய கருவிகளெல்லாம் தேவையில்லை. நம் வீட்டை, தெருவைச் சுற்றிப் பார்த்தாலே போதும்.
எடுத்துக்காட்டாக, இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்:
1. சுவரில் தொங்கும் மாதங்காட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்.
2. அதில் 2க்கு 2 என ஏதாவது நான்கு எண்களைக் கட்டம் கட்டுங்கள். எடுத்துக்காட்டாக, இந்தப் படத்தில் உள்ளதுபோல் 4, 5, 11, 12
3. இவற்றைக் குறுக்கில் இரண்டிரண்டாகப் பெருக்கச் சொல்லுங்கள்:
4 × 12 = 48
5 × 11 = 55
4. இந்தப் பெருக்குத்தொகைகளுக்கிடையில் உள்ள வேறுபாட்டைக் கணக்கிடச் சொல்லுங்கள்:
55 – 48 = 7
5. இப்போது, இந்த மாதங்காட்டியில் இப்படி 2க்கு 2 என எந்த நான்கு எண்களைக் கட்டம் கட்டி இப்படிப் பெருக்கிக் கழித்தாலும் இதே 7தான் விடையாக வரும் என்று சொல்லுங்கள். அவர்களை நான்கைந்து வெவ்வேறு இடங்களில் கட்டம் கட்டி முயன்றுபார்க்கச் சொல்லுங்கள். அவர்கள் முகத்தில் வியப்பைப் பாருங்கள்!
6. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் என்றால், இந்தத் தொகை எப்போதும் 7ஆக இருப்பதற்கான காரணத்தை அவர்களையே கண்டறியச் சொல்லுங்கள்.
கணக்கு ஒரு வாழ்க்கைக் கலை. அதில் குழந்தைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிட்டால் வாழ்நாள்முழுக்கப் பயன்படும்.
தொடர்புடைய புத்தகங்கள்:
1. நம்(ண்)பர்கள் (சுவையான கணிதப் புதிர்கள், எளிய கதை வடிவில்)
2. கணக்குல கில்லாடி (குழந்தைகளுக்கான சுவையான கணக்குப் புதிர்க் கதைகள்)
இடது மேல் மூலை 30 31 2 3 மட்டும் வராது என கண்டுபிடித்தேன்..பார்த்த உடன்..என் வயது 66
அது அச்சிட்டோர் பிழை, அந்த 30, 31 உண்மையில் கீழே வரவேண்டும் 🙂