‘என் கணவர் ரொம்பக் கோவக்காரர்’ என்றார் அலுவலக நண்பர் ஒருவர். ‘சின்ன வயசுல அவங்கப்பா அவருக்குக் கார் ஓட்டக் கத்துக்கொடுத்திருக்கார். ஆனா, இவர் சரியாக் கத்துக்கலை, தப்புத்தப்பா ஓட்டியிருக்கார். அதனால, அவங்கப்பா கன்னாபின்னான்னு திட்டிட்டார். இவருக்கு ரொம்ப அவமானமாகிடுச்சு. இனி நான் எப்பவும் கார் ஓட்டமாட்டேன்னு தீர்மானிச்சுட்டார்.’
‘அட, அப்புறம்?’
‘அப்புறம் என்ன? கார் ஓட்டறதுதான் கஷ்டம், ஓட்டாம இருக்கறது ஈஸிதானே. எங்களுக்குக் கல்யாணம் ஆனப்புறம் அவருக்கும் சேர்த்து நான்தான் கார் ஓட்டினேன். நாங்க உள்ளூர்ல ஷாப்பிங் போனாலும் சரி, வெளியூருக்குப் போனாலும் சரி, மணிக்கணக்கா நான்மட்டும்தான் டிரைவர். ஒரே போர்.’
‘அடடா!’
‘ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, இப்ப அவர் சூப்பராக் கார் ஓட்டறார்.’
‘அட, அது எப்படி?’
‘நான் கர்ப்பமா இருந்தபோது ஒருநாள், திடீர்ன்னு நடு ராத்திரியில எனக்குப் பிரசவ வலி எடுத்தா யார் என்னை ஆஸ்பத்திரிக்குக் கார்ல கூட்டிக்கிட்டுப் போவாங்கன்னு கேட்டேன். அவ்ளோதான், அடுத்த பதினஞ்சு நாள்ல என்கிட்ட சமர்த்தாக் கார் ஓட்டக் கத்துக்கிட்டார்.’
ஒரு தீவிர உணர்வில் குத்திய முள்ளை அதற்கு இணையான இன்னொரு தீவிர உணர்வால்தான் எடுக்கவேண்டும்போல!