ChatGPTபற்றிய தொடக்கப் பரபரப்புகளெல்லாம் தீர்ந்தபிறகு சற்று நிதானமாக ஒரு மாதம் அதைத் தொடர்ந்து பலவிதங்களில் பயன்படுத்திப்பார்த்தேன். அதன் அடிப்படையில் என் துணிபுகள்:
1. மிக நல்ல கருவி. ஆங்கிலத்தில் தகவல் தொடர்புகள், தனிப்பட்ட, அலுவல் பணிகளை நிகழ்த்துவோருக்கு நன்றாகப் பயன்படும்.
2. ஆனால், சரியாக, இன்னும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் மிகத் துல்லியமாகக் கேள்வி கேட்டால்தான் சரியான பதில் வருகிறது. அதனால், குறைந்தது இரண்டு வாரங்கள் அதோடு பொறுமையாகப் “பழகவேண்டும்”, அதனுடன் எப்படிப் பேசுவது என்று கற்றுக்கொள்ளவேண்டும். புதிய பணியாளரிடம் மேலாளர் செலவிடும் நேரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த நேர்மையான முதலீட்டுக்கு உங்களுக்குப் பல்லாண்டுகள் பலன் கிடைக்கும்.
3. முதன்மையாக, ChatGPTயிடம் எதைக் கேட்கக்கூடாது, எந்த வேலையை அதனிடம் ஒப்படைக்கக்கூடாது என்ற தெளிவு வரவேண்டும். அதற்கும் அந்த இரண்டு வாரங்கள் போதும்.
4. எடுத்துக்காட்டாக, தகவல்கள், புள்ளிவிவரங்களுக்கு ChatGPTஐ நம்பவேண்டாம். ஒன்று, பழைய தகவல் கிடைக்கும், அல்லது, தவறான, கற்பனையான தகவல்கள்கூடக் கிடைக்கும். அதனால், தகவல் திரட்டும் வேலையை மற்ற வழக்கமான வழிகளில்மட்டும் செய்துகொள்வது நல்லது.
5. பல நேரங்களில் அது சரியான கேள்விக்கும் முட்டாள்தனமான பதில்களைத் தரும். அதனால், சாட்GPT தருவனவற்றை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்வது என் வேலை என்று இருந்தால் கெடப்போவது உங்கள் நற்பெயர்தான்.
6. சுமாரான பதில்களை அல்லது உங்களுக்கு நிறைவளிக்காத பதில்களை மேம்படுத்தச்சொல்லி அதனிடமே கேட்கலாம். பெரும்பாலும் நன்றாக மேம்படுத்துகிறது, விரைவாகக் கற்றுக்கொள்கிறது. ஆனால், நாம் வெளிப்படையாகக் கேட்டால்தான்.
சுருக்கமாகச் சொன்னால், மிகுந்த அறிவுள்ள, ஆனால் கொஞ்சம் கோக்குமாக்கான வேலைக்காரர் ஒருவர் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் சற்று ஐயத்துடன் அதை அணுகுங்கள். அதன் அறிவின்மீது உங்கள் அறிவை உட்காரவைத்தால்மட்டும்தான் ChatGPT உங்களுக்குப் பயன்படும், மனித மூளையின் மேன்மையும் விளங்கும்.