சிறிய பொருள், பெரிய பலன்
காந்தியை நாம் தேசத்தந்தை என்கிறோம். அவருடைய சிந்தனைகளை, முன்வைப்புகளை ஒட்டுமொத்த உலகமும் மதிக்கிறது. அநேகமாக எல்லாக் கண்டங்களிலும் அவருடைய குறிப்பிடத்தக்க சீடர்கள் இருக்கிறார்கள், அவருடைய வன்முறையற்ற போராட்ட முறையைப் பயன்படுத்திப் பெரிய வெற்றிகளைக் கண்டிருக்கிறார்கள். அரசியலில்மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் காந்தியம் ஒரு பின்பற்றக்கூடிய நெறியாகவே இருக்கிறது.
அதே நேரம், காந்தியின் காலத்திலும் சரி, இப்போதும் சரி, அவரைக் கடுமையாக எதிர்ப்பவர்களும் உள்ளார்கள். அதுபோன்ற எதிர்ப்புகளை அவர் வரவேற்றார், அவர்களுடன் உரையாடத் தயாராக இருந்தார், முக்கியமாக, தன்னுடைய கருத்து தவறு என்று தெரிந்தால் அதை மாற்றிக்கொள்ளும் துணிவும் அவருக்கு இருந்தது. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான பண்பு இது.
ஆனால், எதிர்க்கிற எல்லாரும் கருத்தளவில் விவாதிப்பதில்லை. எந்தக் கொள்கைகளையோ தத்துவங்களையோ புரிந்துகொள்ளாமல் சும்மா ஒருவர்மீது அழுக்கை வாரி இறைப்பதையே நோக்கமாகக் கொண்ட எதிர்ப்பாளர்களும் உண்டு. இதுபோன்ற ‘எதிர்ப்பு’களை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவேண்டியதில்லை. இதை விளக்குவதற்காக, காந்தியின் வாழ்க்கையிலிருந்தே ஒரு கதையைச் சொல்வார்கள்.
மிகவும் புகழ் பெற்ற அந்தக் கதையைச் சொல்வதற்குமுன்னால், இது கற்பனைக் கதையா, அல்லது உண்மை நிகழ்வா என்கிற ஐயம் எனக்கு உள்ளது. நான் இணையத்தில் தேடியவரையில், அருண் J. மேத்தா எழுதிய Lessons in Non-Violent Civil Disobedience என்ற ஒரு புத்தகத்தில்தான் இந்தக் குறிப்பு இருக்கிறது. காந்தியோ அவருடன் பழகிய இன்னொருவரோ இதை நேரடியாக எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
இது கற்பனைக்கதையாகவே இருந்தாலும் பரவாயில்லை. இதை வரலாற்று உண்மையாக எண்ணாமல், இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தைமட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒருமுறை, காந்திக்கு ஒரு வெறுப்புக் கடிதம் (Hate Mail) வந்திருந்ததாம். அதில் ஒருவர் அவரைக் கண்டபடி வசைபாடியிருந்தாராம். அந்தக் கடிதத்தைப் பொறுமையுடன் படித்தபிறகு, அதிலிருந்த பேப்பர் க்ளிப்பை(அல்லது குண்டூசியை)மட்டும் காந்தி எடுத்துக்கொண்டாராம், கடிதத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாராம்.
அருகிலிருந்த ஒருவர் இதைப் பார்த்து வியந்தாராம், ‘பாபு, உங்களுக்கு வருகிற எல்லாக் கடிதங்களுக்கும் பதில் எழுதுவீர்களே, இந்தக் கடிதத்துக்குப் பதில் எழுதப்போவதில்லையா?’ என்று கேட்டாராம்.
காந்தி தன்னிடமிருந்த பேப்பர் க்ளிப்பைக் காட்டி அவருக்குப் பதில் சொன்னாராம், ‘இந்தக் கடிதத்தின் ஒரே பயனுள்ள பகுதியை நான் எடுத்துக்கொண்டுவிட்டேன்.’
குண்டூசி, பேப்பர் க்ளிப் போன்றவை மிக மலிவாகக் கிடைக்கிறவை; ஆகவே, நாம் அவற்றை அலட்சியமாகவே நினைக்கிறோம்; விருப்பப்படி கூடுதல் எண்ணிக்கையில் பயன்படுத்துகிறோம்; பின்னர் வீசி எறிந்துவிடுகிறோம். ஆனால், தேவையான நேரத்தில் ஒரு குண்டூசி இல்லாமல் அலைந்தவர்களுக்குதான் அதன் மகத்துவம் தெரியும்.
என்னுடைய பள்ளி நாட்களில் குண்டூசியெல்லாம் யாரும் வாங்கித்தந்ததில்லை. வீடு பெருக்கும் துடைப்பத்திலிருந்து ஈர்க்குச்சியை எடுத்து ஒடித்துப் பயன்படுத்துவோம்.
அதன்பிறகு, ஸ்டேப்ளர்கள் அறிமுகமாகின. சடக் சடக்கென்று நினைத்தபோது காகிதங்களைப் பிணைக்கும் வசதி மிகவும் பிடித்திருந்தது.
சில நேரங்களில் சட்டென்று அந்த ஸ்டேப்ளர் கைக்கு அகப்படாமல் திணறியதுண்டு. வேறு வழியில்லாமல், ஓர் ஆவணத்தை ஏற்கெனவே பிணைத்திருந்த ஸ்டேப்ளர் பின்னைக் கவனமாகப் பிரித்து எடுத்து, அதை இன்னோர் ஆவணத்தில் மெதுவாகத் துளையிட்டு நுழைத்து நகங்களால் மடித்துப் பயன்படுத்திய அனுபவம் எனக்கு இருக்கிறது.
குண்டூசி, பேப்பர் க்ளிப், ஸ்டேப்ளர் பின் போன்ற சின்னஞ்சிறிய பொருட்களுக்கு நாம் கற்பனையிலும் நினைக்காத பெரிய பயன்கள் இருக்கின்றன. இவற்றை முற்றிலும் வேறுவிதமாகப் பயன்படுத்தி மிக நல்ல நன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள் பலர். சுவையான அந்த உத்திகளை, கதைகளைப்பற்றிப் படிக்கப் படிக்க வியப்பு மிகுகிறது.
எடுத்துக்காட்டாக, எழுதப்பட்ட ஒரு நாவலின் பக்கங்களைத் தொகுப்பதற்குப் பேப்பர் க்ளிப் பயன்படலாம்; ஆனால், அந்தப் பேப்பர் க்ளிப்பையே நாவல் எழுதுவதற்கான உத்தியாகவும் பயன்படுத்தலாம் என்கிறார் ஒருவர்.
(தொடரும்)
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்