சிறுவயதில் சிலருக்கு எண்களின்மீது மிகுந்த பரவசம் வந்துவிடும். கணக்குப் பாடத்தில் தெரியும் சிறிய ஒழுங்குகள்கூட அவர்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தரும். மேலும் ஆழமாகச் செல்லச் செல்ல, மொத்த உலகமும் எண்களால்தான் இயங்குகிறது என்பது தெரிந்து அவற்றின்மீது மதிப்பு பெருகும். அதன்பிறகு எல்லாவற்றையும் எண்களாகப் பார்க்கத் தொடங்கிவிடுவோம்.
இவையெல்லாம் எனக்கு நடந்தவை, நடக்கிறவை. பள்ளி வயதில் தொடங்கி இன்றுவரை கண்ணில் படும் எண்களையெல்லாம் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, 4821 என்று ஒரு கார் எண்ணைப் பார்த்தால், எட்டை நான்கால் வகுத்தால் இரண்டு, அதை மீண்டும் இரண்டால் வகுத்தால் ஒன்று, அதை ஒன்றால் வகுத்தால் மறுபடி ஒன்று என்று நினைப்பேன். அல்லது, நான்கு எண்களையும் கூட்டிப் பதினைந்து என்று ஆக்குவேன். அது இங்குள்ள எந்த எண்ணால் மீதமின்றி வகுபடுகிறது என்று யோசிப்பேன். பின்னர் அந்தப் பதினைந்தை இங்குள்ள எல்லா எண்களாலும் பெருக்கிக் கூட்டுவேன்.
நான் இப்படிக் கணக்கிடுவதற்கான தேவை சிறிதும் இல்லை. இது 100% வெட்டி வேலைதான். ஆனாலும், என்னுடைய மூளை அப்படிதான் இயங்குகிறது என்னால் எண்களை வேறு எப்படியும் பார்க்க இயன்றதில்லை. அவை பெருக்கப்படவேண்டியவை, கூட்டப்படவேண்டியவை, அப்படிப் பெருக்கிக் கூட்டி வரும் எண்களும் பெருக்கப்படவேண்டியவை, கூட்டப்படவேண்டியவை. இப்படியே முடிவிலி எண்ணை நோக்கிச் சென்றுகொண்டிருக்கலாம் என்று தோன்றும். தீராக் காதல்.
எனக்கு எண்களைப்போல் மற்றவர்களுக்கு எழுத்துகள், வண்ணங்கள், உடல் அசைவுகள், இசைத் துணுக்குகள், சமையல் ருசி, ஒழுங்குபடுத்தல், பிறர் சொல்வதைக் கேட்டல், வழிகாட்டி ஆற்றுப்படுத்தல் என்று பல அடிப்படை விஷயங்களின்மீது காதல் பிறந்திருக்கும், வாழ்நாள்முழுக்கத் தொடரும். ‘நாம் எங்கு மகிழ்ச்சியாக உணர்கிறோமோ அதுதான் நம் இல்லம்’ என்று ஓர் ஆன்மிகப் புத்தகத்தில் படித்தேன். இதுவும் அப்படிதான். அந்த இல்லத்தைக் கண்டறிந்துவிட்டவர்களுக்கு, பெற்றோருக்குத் தெரியாமல், மற்றோருக்கும் தெரியாமல் மரக்கிளைகளின்மீது கரடுமுரடான சிறு வீடொன்றைக் கட்டி, அதில் பதுங்கி மகிழும் சிறுவனைப்போன்ற மன மலர்ச்சி வந்துவிடும். உண்மையில் அங்குதான் நாம் ‘வாழ்கிறோம்’.