நான் ஜே. கே. ரௌலிங்கின் மிகப் பெரிய ரசிகன். ஆனால், ஹாரி பாட்டருக்கு வெளியில் அவர் எழுதிய எதையும் என்னால் ரசிக்க இயலவில்லை. அதை எழுதியவர்தான் இதையும் எழுதினாரா என்கிற அளவுக்கு அவை எனக்கு எரிச்சலளித்தன.
ஆகவே, அவருடைய புதிய நாவலான ‘The Ickabog’ சிறுவர் கதையைச் சிறிது எச்சரிக்கையுடன்தான் அணுகினேன். இத்தனைக்கும் அது இணையத்தில் இலவசமாகவே கிடைத்தது. ஆனாலும் படிக்கத் தோன்றவில்லை.
சென்ற வாரம், ஆகஸ்ட் 5ம் தேதியுடன் The Ickabogஐ இணையத்திலிருந்து நீக்கப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வழக்கமான இந்திய மிடில் க்ளாஸ் மனநிலை தொற்றிக்கொண்டது. ஓசியில்தானே கிடைக்கிறது, நீக்குவதற்குள் படித்துப் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன், முழுக்கப் படித்துவிட்டுதான் நிமிர்ந்தேன்.
இத்தனைக்கும், இந்தப் புத்தகத்தில் ஹாரி பாட்டர் இல்லை, மேஜிக் இல்லை, கனமான கதை முடிச்சுகள்கூட இல்லை, சிறுவர்களுக்கேற்ற மிக எளிய கதைதான். ஆனால், ஜே. கே. ரௌலிங் அதைக் கட்டமைத்து எழுதியிருக்கும் விதம், அவர் எப்பேர்ப்பட்ட master of words என்பதைக் காட்டுகிறது. கதைக்களத்தையும் அதில் வரும் மாந்தர்களையும் (சின்னச் சின்னப் பாத்திரங்களைக்கூட) அவர்களுடைய உணர்வுகளையும் (உணவுகளையும்கூட!) அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தை, ‘இதனால் அறியப்படுவது என்னவென்றால்’ என்று உரக்கப் பேசாமல் கதைக்குள் அவர் நீதிகளை அமைத்திருக்கும் திறத்தை, ஒரு மிகப் பெரிய பிரச்னைக்கு உண்மையில் யாராலும் நம்ப முடியாத, அதே சமயம் எல்லாரும் நம்பவேண்டிய ஒரு தீர்வைத் தந்திருக்கிற அக்கறையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்த விதத்தில் குழந்தைகள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய கதை இது.
இன்னொரு சுவையான விஷயம், கதையின் சில பகுதிகளைப் படிக்கும்போது, இது சிறுவர் நாவலா, அல்லது, அந்தப் பாவனையில் அரசியலைப் பேசும் நாவலா என்று தோன்றுகிறது. ஜே. கே. ரௌலிங் இந்தியாவுக்கு வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றாரோ என்கிற ஐயம்கூட வருகிறது. கதையைப் படிக்கும் இந்தியர்கள் நான் எந்தப் பகுதிகளை, பாத்திரங்களைக் குறிப்பிடுகிறேன் என்று தெளிவாக உணர்வார்கள், தங்களுக்குள் கமுக்கமாகச் சிரித்துக்கொள்வார்கள்.
The Ickabog இன்னும் 3 நாள் இலவசமாகவே கிடைக்கும். அதன்பிறகு, நவம்பர் மாதத்தில் நூல் வெளியானபின் விலைக்கு வாங்கிப் படிக்கலாம்.
