இன்றைய காலை ஒரு நல்ல செய்தியுடன் தொடங்கியது. என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்த ஒருவர் அவற்றை மனமாரப் பாராட்டிவிட்டு, புதிய தலைப்பொன்றைப் பரிந்துரைத்து எழுதக் கேட்டிருந்தார்.
இப்படி அன்போடும் உரிமையோடும் எனக்குத் தலைப்புகளைப் பரிந்துரைக்கும் நண்பர்கள் ஏராளம். அனைவருடைய கோரிக்கைகளையும் நிறைவு செய்யத்தான் மனம் விரும்புகிறது. சொல்லப்போனால், ஒரு நல்ல தலைப்பைப் பார்த்ததும் அடுத்த நொடி அதை எழுதத் தொடங்கிவிடவேண்டும் என்கிற துள்ளல் உண்டாகிறது. உடலுக்கு ஆக்ஸிஜன்போல் மனத்துக்கு அந்தத் துள்ளல் என்று நினைக்கிறேன்.
ஆனால், ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம்தான், அதில் உனக்கு இத்தனை வேலைகள், கடமைகள் என்று ஒதுக்கிவைத்திருக்கிற சூழ்நிலையில் அந்த மழையில் நாம் மிகச் சிலவற்றைத்தான் அள்ளமுடியும். அது தரும் வருத்தம் நம்மைப் பின்னுக்கிழுக்கிறது.
எனினும், இந்த இருமை சோகமானது இல்லை, மகிழ்ச்சியானது. எதைச் செய்வது என்று தெரியாமல் சலித்து அமர்ந்திருப்பதைவிட, கை நிறைய அழகழகான யோசனைகளுடன் எதை எடுப்பது, எதை விடுவது என்று புரியாமல் திகைப்பது நல்லதல்லவா! அந்தக் குழப்பத்தைத் தாணடி வரும் படைப்புகள்தான் வாழ்க்கைக்குப் பொருளைத் தருகிற பண்பும் பயனும்.
நான் என்னுடைய எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி சொல்கிற ஒரு விஷயம்: ஒருபக்கம், அடுத்த நான்கைந்து வாரங்களுக்குப் படிக்கவேண்டிய தலைப்புகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளுங்கள. இன்னொருபக்கம், அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு எழுதவேண்டிய தலைப்புகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்களுடைய கவனச்சிதறல்களும் நேரத்தைத் தின்னும் கெட்ட பழக்கங்களும் விரைந்தோடுவதைப் பாருங்கள்!