பொறியியல் மாணவர்களுக்கு இலக்கியம் ஒரு பாடமாகச் சேர்க்கப்பட்டிருப்பதைச் சிலர் கேலி செய்வதைப் பார்க்கிறேன். இத்தனைக்கும் அது கட்டாயமில்லாத பாடம்தான். ஆனாலும் மக்கள் கிண்டலடிக்கிறார்கள்.
இலக்கியம் படித்தல் என்பது எல்லாருக்கும் தேவையான ஒன்று, அது பொறியாளர்களுக்கும் பொருந்தும். அதில் இருக்கிற மென் நன்மைகள் (Soft Benefits) எல்லாவற்றையும் விட்டுவிட்டால்கூட, கண்ணுக்கெதிரில் தெரிகிற ஒரு மிகப் பெரிய நன்மை இருக்கிறது: என்னுடைய பணி அனுபவத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கும் அந்தப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் சிந்தனைத் தெளிவில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதைப் பலமுறை திரும்பத் திரும்பப் பார்த்துள்ளேன். அவர்கள் படித்த விஷயங்கள் அவர்களுடைய தகவல் தொடர்பைச் செழுமைப்படுத்திவிடும், புதிய வாசல்களைத் திறந்துவிடும்.
அதற்காகப் புத்தகம் படிக்காதவர்களெல்லாம் முட்டாள்கள் என்று பொருள் இல்லை. ‘கல்லூரிக்குப்பிறகு ஒரு புத்தகம்கூடப் படித்ததில்லை’ என்று சொல்கிற பெரும் திறமைசாலிகளுடனும் நான் பணியாற்றியிருக்கிறேன், பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் கண்டிப்பாகச் சிறுபான்மைதான் என்பது என்னுடைய உறுதியான எண்ணம்.
பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என எல்லாரும் தங்களுக்கு விருப்பமான எதையாவது தொடர்ந்து படிக்கவேண்டும், அந்தப் பழக்கம் அவர்களுடைய செயல்திறனைப் பலமடங்கு மேம்படுத்தும். ஆனால் உடனடியாக இல்லை, மிக மெதுவாக, அதே நேரம் மிக உறுதியாக.