இளையராஜாவின் மிகப் பழைய பேட்டித் துணுக்கு ஒன்றை ட்விட்டரில் பார்த்தேன், தொடக்க நிலைக் கலைஞர்கள் எல்லாரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நுட்பமான பாடம் கிடைத்தது.
ராஜா சொந்தமாக மெட்டமைக்கத் தொடங்கிய புதிதில் தன்னுடைய Introvert தன்மை காரணமாகத் தன் மெட்டுகளைப் பிறரிடம் இசைத்துக் காண்பிக்கத் தயங்கியிருக்கிறார், அவரே அவற்றை இசைத்துப் பார்த்து ‘ச்சீ, இது சகிக்கலை’ என்று ஒவ்வொன்றாக நிராகரித்திருக்கிறார். அவற்றை நண்பர்களிடம் இசைத்துக் காண்பிக்கவோ, ‘நான் இசையமைத்த பாட்டு இது, கேட்டுப்பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்று கருத்து கேட்கவோ கூச்சம்.
நல்லவேளையாக, ராஜா இந்தச் சுழலில் நிரந்தரமாகச் சிக்கிவிடவில்லை. கூச்சத்தை மீறி இதிலிருந்து விடுபட ஒரு நல்ல உத்தியைக் கையாண்டிருக்கிறார்.
அதாவது, மேடையில் அவர் பிற திரைப்படப் பாடல்களை இசைக்கும்போது நடுவில் தான் இசையமைத்த ஒரு பாடலை நுழைத்துவிடுவார். அதைக் கேட்டு ‘நல்லா இருக்கே, இது எந்தப் படத்துல வந்த பாட்டு?’ என்று பலர் கேட்க, அதை ஓர் உறுதிப்படுத்தலாக எடுத்துக்கொண்டு, திரைப்படங்களில் வருகிற பாடல்கள் அளவுக்குத் தன்னுடைய பாடல்களும் தரமாக இருக்கின்றன என்ற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். அதைக் கொண்டு தன் மெட்டுகளைப் பிறரிடம் இசைத்துக் காண்பிக்கும் துணிவைப் பெற்று முன்னேறியிருக்கிறார்.